புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஹராப்பான் ‘திடீர்’ ஆதரவாளர்களே எங்களை இழிவு படுத்தாதீர்கள்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஹராப்பான் ‘திடீர்’ ஆதரவாளர்களே எங்களை இழிவு படுத்தாதீர்கள்!

கோலாலம்பூர், மே 12-

நாட்டின் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்து வந்த தேசிய முன்னணியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்தி எதிர்கட்சியினர் ஆளும் கட்சியினராகியுள்ளனர்.

குறிப்பாக, புதிய வரலாறை படைத்திருக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) வெற்றி மலேசியர்களின் வெற்றியாக பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தேசிய முன்னணி மிக பெரிய தோல்விக்கு பின்னர் அக்கூட்டணியிலுள்ள உறுப்புக் கட்சிகளான ம.இ.கா., மைபிபிபி முதலான இந்திய கட்சிகளைச் சேர்ந்த சாதாரண உறுப்பினர்களை அநேகன்.கோம் இணையத்தள செய்தி பதிவேடு தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டது. (இவர்கள் அனைவரும் முகநூல், வாட்சாப் முதலான சமூகவலைத்தளங்களில் தங்களின் கட்சிகளுக்காக ஆதரவாக ஈடுபட்டவர்கள்.)

பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி இழந்துள்ளது குறித்து அவர்களிடம் வினவப்பட்ட போது, அது தங்களுக்கு வருத்தம் தந்த போதிலும் இப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசியாவைச் சீரமைத்து மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

உண்மையில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் தலைமைத்துவ காலத்தில் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கி சென்றது. 1எம்.டி.பி., பொருள் மற்றும் சேவை வரி, விலைவாசி உயர்வு முதலான காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயினும், அவர்களின் மனக்குமுறலுக்கு அப்போதைய தேசிய முன்னணி அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இன்று அக்கூட்டணி ஆட்சியை இழந்ததற்கு நஜீப்பும் அவரது நிர்வாகமுமே முழுக்காரணம். காரணம், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர், மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவரைப் பற்றியதாகவே இருந்தது.

மேலும், மக்களின் சக்தியை உணராமல் அலட்சியம் காட்டியது, விலை வாசி உயர்வை தடுக்காதது இப்படியாக பலவற்றைக் கூறிக்கொண்டே போகலாம். இதனால், மக்கள் மட்டுமல்ல, நாங்கள் வெறுப்படைந்து விட்டோம். இதற்கு ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலே இம்முறை ஹராப்பானை ஆதரித்தோம். நாங்கள் மட்டுமல்ல, எங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலர் இம்முறை ஹராப்பானுக்கு ஆதரவளித்தனர்.

உண்மையைச் சொல்ல போனால், இன்று ஹராப்பானுக்கு கிடைத்த வெற்றி அதன் ஆதரவாளர்களால் மட்டுமே கிடைத்ததல்ல. மாறாக, தேசிய முன்னணியில் உள்ள பல்வேறு கட்சிகளின் சாதாரண உறுப்பினர்கள் அதன் தலைமைத்துவம் மீது நம்பிக்கை இழந்து ஒரு மாற்றத்திற்காக ஹராப்பானை வெற்றியடைய செய்தவர்கள். நாங்கள் இன்னமும் நாங்கள் சார்ந்த கட்சியில் இருந்தாலும் ஹராப்பானின் வெற்றியை எண்ணி மகிழ்ச்சியில் எண்ணி வருகிறோம். குறிப்பாக, பொதுத்தேர்தலுக்கு முன்பு துன் மகாதீர் உள்பட ஹராப்பானின் பல தலைவர்கள் மலேசியாவைக் காப்பாற்ற ஹராப்பானுக்கு வாக்களியுங்கள், யாருக்கும் பயப்பட வேண்டாம் என்று கூறினார்கள். மலேசியர் என்ற அடிப்படையிலும் நாட்டின் நலனே முக்கியம் என்ற அடிப்படையிலும் எங்கள் கட்சி, தேசிய முன்னணி தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பாமல் ஹராப்பானுக்கு வாக்களித்தோம். ஹராப்பான் ஆதரவாளர்கள் மட்டுமே வாக்களித்திருந்தால் இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்குமா?

பல ஹராப்பான் ஆதரவாளர்கள் எங்கள் சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டாலும் இன்னும் சிலர் எங்களை கிண்டல் கேலி செய்வது வருத்தமளிக்கின்றது. அவர்கள் ஹராப்பானில் இருந்துக்கொண்டு வாக்களித்து வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். நாங்கள் தேசிய முன்னணியில் இருந்தாலும் ஹராப்பானுக்கு ஆதரவளித்து மறைமுகமாக கொண்டாடுகிறோம்.

எது எப்படியிருப்பினும், இனி மேலாவது தேசிய முன்னணியில் உள்ள தலைவர்கள் தனிநபர் நலனைக் கருத்தில் கொள்ளாமல் மக்கள் மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என பெயர் குறிப்பிடவிரும்பாத அவர்கள் வலியுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன