கோலாலம்பூர், மே 12-

ஓய்வுக்காக ஜகார்த்தா செல்லவிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பயணத்தை நிறுத்தியது தாம் தான் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.

இன்று காலை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் அவர்தம் துணைவியார் இந்தோனேசியா ஜகார்த்தாவிற்கு 2 நாட்கள் பயணமாக விருப்பதாக கூறப்பட்டது. இதனை தமது டுவிட்டர் பக்கத்தில் நஜீப் உறுதிப்படுத்தியிருந்தார்.

பின்னர் தமது பயணத்திற்கு குடிநுழைவு அதிகாரம் தரவில்லை என்றும் மலேசியாவிலேயே ஓய்வு எடுக்கவிருப்பதாகவும் நஜீப் கூறியிருந்தார்.

இந்நிலையில் “உண்மைதான்! நஜீப் நாட்டை விட்டு வெளியேறுவதை நான்தான் தடுத்தேன்” என்று பிரதமர் மகாதீர் கூறியுள்ளார்.

நஜீப் மீது விசாரணை நடைபெறவிருப்பதால் குடிநுழைவுத் துறை அவரை தடுத்து நிறுத்தியதாகவும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சத்து கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

நஜீப் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் விசாரணை நடக்கும் என்றார் மகாதீர்.

நஜீப் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

வெளிநாடுகளில் இருக்கும் போது இம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதையும் துன் மகாதீர் சுட்டிக்காட்டினார்.