பெஸ்தாரி ஜெயா வட்டாரத்தில் பல பொது இயக்கங்கள் மற்றும் ஐ.பி.எஃப் கட்சியின் வழி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கியவர் அன்பழகன். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வாரம் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் பொருளாதார ரீதியில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார். எஸ்.டி.பி.எம் படிக்கும் மகள் நவசங்கரிக்குத் தேவைப்படும் மடிக் கணினிக்காக ஓராண்டுக்கு மேலாக உள்ளூர் பிரமுகர்களின் உதவி கேட்டு தோல்வி கண்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கோல சிலாங்கூர் தொகுதி தேசிய முன்னணி இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமரசாமி ஜீவாவின் உதவியை நாடியுள்ளார். இதனை மலேசிய மக்கள் சேவை மையத்தின் தேசியத் தலைவர் டத்தோ மலர்விழி குணசீலனிடம் குமரசாமி தெரிவித்ததையடுத்து அன்பழகனின் வீட்டிற்கு நேரில் வருகை புரிந்து அவரின் மகள் நவசங்கரியிடம் மடிக் கணினியை ஒப்படைத்தார் மலர்விழி குணசீலன்.

கோல சிலாங்கூர் தொகுதி காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஜீவா, தொகுதியின் மகளிர் அணித் தலைவி மகேஸ்வரி, மஇகா புக்கிட் மெலாவாத்தி கிளையின் தலைவி திருமதி யோகேஸ்வரி ஆகியோரும் உடன் வந்தனர். அன்பழகனையும், அவரின் மனைவி, பிள்ளைகளிடம் நலம் விசாரித்ததோடு கல்வியில் சிறந்து விளங்கி சாதனை படைக்கும்படி அறிவுரை கூறினார்.

மலர்விழி குணசீலனிடமிருந்து மடிக் கணினியைப் பெற்றுக் கொண்ட நவசங்கரி, உள்ளம் பூரிப்படைந்ததோடு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அன்பழகனும், அவரின் குடும்பத்தினரும் நன்றியைத் தெரிவித்தனர்.  பெஸ்தாரி ஜெயாவில் ஐ.பி.எஃப் கட்சி வலுவுடன் இயங்குவதாகக் குறிப்பிட்ட மலர்விழி குணசீலன், இவ்வட்டார மக்களை ஒருங்கிணைக்க ‘நினைத்ததை முடிப்பவன் என்ற கலை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாகக் கூறினார்.

இதற்கு ஒத்துழைப்பு நல்க தான் தயார் என்று அன்பழகன் கூறிய வேளையில், இந்நிகழ்ச்சி வெற்றி பெற தொகுதி காங்கிரஸ் எல்லா வகையான உதவிகளையும் வழங்கும் என்று டாக்டர் குமரசாமியும் தெரிவித்துள்ளார்.