கோலாலம்பூர், மே 16-
மாமன்னரின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலையாகியிருக்கும் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசியல் காரணத்திற்காக தன்னை சிறைக்கு அனுப்பிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் மீது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் எண்ணத்தை தாம் கொண்டிருக்கவில்லை என தெரிவித்தார்.

தனிப்பட்ட முறையிலான எவ்வித வெறுப்புகளையும் நான் கொண்டிருக்கவில்லை. நான் சிறைக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தை எதிர்ப்பதற்கான விவகாரமாக ஆக்குவதை நான் விரும்பவில்லை என இன்று சிகாம்புட்டிலுள்ள தனது இல்லத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

ஆனால், மக்கள் மீதான அநீதி மற்றும் குற்றச்செயல், இந்நாட்டில் கலாச்சாரமாக பரவிக்கிடக்கும் ஊழல் விவகாரம் முதலானவற்றிற்கு நஜீப் பதில் கூறியே ஆக வேண்டுமென அன்வார் குறிப்பிட்டார். முன்னராக, டத்தோஸ்ரீ நஜீப் சுங்கை பூலோவில் தடுப்புக் கைதியாக வைக்கப்படுவாரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு சொன்னார்.

அன்வார் தனது தனிப்பட்ட உதவியாளர் முகமட் சைபுல் புகாரி அஸ்லானை ஓரினப் புணர்ச்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஜோடிக்கப்பட்டதாக அன்வார் கூறியிருந்தார்.

இந்நிலையில், அன்வாருக்கு இன்று மாமன்னர் சுல்தான் முகமட் V பொதுமன்னிப்பை வழங்கியதைத் தொடர்ந்து அவர் விடுதலையானார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அரசாங்கம் வெகுவிரைவில் நஜீப் மீது 1எம்.டி.பி. தொடர்பான குற்றச்சாட்டை சுமத்தும் என கூறினார்.