கோலாலம்பூர், ஆக. 2-
சுபாங் ஜெயா, ஜாலான் பூச்சோங் பழைய சீபில்டு தோட்டம் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிலப் பிரச்னைக்கு தீர்வு காண சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முன்வரவேண்டும் என்று மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திர குமணன் வலியுறுத்தினார். இந்த ஆலய நிலப்பிரச்னைக்கு தீர்வு காண 12 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேல் விவரங்களை தெரிவித்தார். இந்த ஆலயப் பிரச்னைக்கு தீர்வு காண சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி முனைப்பு காட்ட வேண்டும் என்று ஜூன் 5ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்பின்னர் இந்த ஆலயம் உடைக்கப்படுவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்னையை கவனிப்பதாக மந்திரி புசார் கூறியிருந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சீபில்டு தோட்டம் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் 143 ஆண்டுகள் பழைமையான மரம் இருக்கின்றது. அந்த மரத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்று சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரிக்கும் கடிதம் அனுப்பினோம். ஆனால் அவரும் எந்த பதிலும் தரவில்லையென்று சந்திர குமணன் கூறினார்.
2008ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் கம்போங் ஜாவா மஹா மாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டது. அந்த விவகாரத்தில் தேசிய முன்னணி அரசு முறையான நடவடிக்கையை முன்னெடுக்க தவறியதால் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை இழந்தது. அதேபோல் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்கு மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதையும் டத்தோ சந்திர குமணன் சுட்டிக்காட்டினார்.