(ராமநாதன் பன்னீர்செல்வம்)

ஊடகத்துறை என்பது பறந்து விரிந்த ஒரு துறை. நம்முன்னோர்கள் பயன்படுத்திய பறை முதற்கொண்டு பின்னர் நாளிதழ், சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, வலைத்தளங்கள் என இன்றுள்ள ஃபேஸ்புக், வாட்சாப், மேசெஞ்சர் போன்றவையும் ஊடகத் துறையில் முக்கிய அங்கமாக விளங்குகின்றன. சுருங்கக் கூறினால் மக்களுக்கு செய்திகளையும் தகவல்களையும் வழங்கும் ஒரு கருவியாக ஊடகத்துறை செயல்பட்டு வருகின்றது.

ஒரு பேனா முனை நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் என்பதற்கு வரலாற்று சம்பவங்கள் பல உள்ளன. இதனை கருத்தில் கொண்டே 1946 ஆம் ஆண்டு ஐ.நா. சபை பேச்சுரிமைக்கு முழு சுதந்திரம் வழங்கியது. பல மேற்கத்திய நாடுகள் இச்சுதந்திரத்தை முழுமையாக அமல்படுத்த முற்பட்டன, பின்னர் காலப் போக்கில் தத்தம் நாடுகளின் அரசியல் சூழ்நிலைக்கேற்ப இந்தச் சுதந்திரம் கட்டங்கட்டமாக குறைக்கப்பட்டன.

நம் நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. Akta Media Cetak dan Penerbitan 1984, (akta 301), Kanun Keseksaan (Akta 574), AktaHAsutan 1948 (Akta 15), Akta Fitnah 1957 (Akta 286), AktaKomunikasi dan Multimedia 1998 (Akta 588), Akta Berita Palsu2018, போன்ற சட்டங்களின் வழி நம் நாட்டின் ஊடகங்கள் அரசாங்க நேரடி பார்வையிலும் கண்காணிப்பிலும் இன்றளவிலும் வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க ஊடகங்களைத் தவிர சில தனியார் ஊடகங்கள் அரசு சார்புடைய நிறுவனங்களின் (GLC) கட்டுப்பாட்டில் உள்ளன. BERITA PUBLISHING BERHAD, MEDIA PRIMA BERHAD போன்ற அரசு சார்புடைய நிறுவனங்களின் கீழ் சில ஊடகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த சூழ்நிலையில் அரசாங்க சார்புடைய செய்திகளையும் தகவல்களையும் பரப்புவதில் இந்த ஊடகங்கள் முன்னுரிமை வழங்குகின்றன.

தேசிய முன்னணியின் முன்னாள் அரசாங்கமும் ஊடகத்துறையினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை நாம் அறிவோம். தேர்தல் காலங்களில் அப்போதைய அரசாங்கத்தின் பரப்புரைகள், செயல்படுத்திய திட்டங்கள் ஊடகங்களின் வாயிலாக வெளியிடப்பட்டன.

இதில் என்ன விந்தை என்றால், தேர்தல் காலத்தின் போது அரசாங்கம் இல்லை, ஒரு கட்சிக்காக ஊடகவியலாளர்கள் துணை போகின்றனர் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு நம் இன ஊடகவியலாளர்களை தூற்றிப் பேசினர் நம் இனசகோதரர்கள்.

எனது கேள்வி

1. ஊடகத்துறையில் பணிபுரியும் நம் சகோதரர்கள் நடப்பில் இருந்த அரசாங்கத்தின் ஆணைக்கு செயல்பட்டது தவறா?

2. அந்த அரசாங்கம் செய்த திட்டங்களை மட்டுமேசொன்னார்கள். அது தவறா?

3. எந்த விளம்பரத்திலோ தகவலிலோ தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள் என்று கூறப்பட்டதா?

4. நம் ஊடக நண்பர்கள் மனநிலை அல்லது அவர்களின் உண்மை நிலைபாட்டை நீங்கள் அறிவீர்களா?

5. இந்த தகவல்களைச் சொன்னதற்காக அவர்களுக்கு விருது அல்லது கார், பணம், பொருள் ஏதும் வழங்கப்பட்டதா?

(இன்னும் அதே மாதச் சம்பளம் தானே வாங்குகின்றார்கள்)

6. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதே ஊடகத்துறையில் பணிபுரிந்து அரசாங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் இப்படித்தான் பேசுவீர்களா?

7. இதே மாதிரியான தகவல்கள் மலாய், சீனம், ஆங்கில ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன. ஏன் மற்ற இன மக்கள் உங்களைப் போன்று கூச்சலிடவில்லை?

வெளியில் இருந்து கொண்டு வாட்ஸ்சாப்பிலும் முகநூலிலும் கூச்சலிட்டவர்கள் அதிகம். உண்மை நிலை அறியாமல் நடப்பு அரசியல் சூல்நிலைக்கு ஆட்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசினீர்கள். அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகவியலாளர்கள் நடப்பு அரசாங்கத்தின் ஆணையின் பேரிலே செயல்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

(முட்டை இடும் கோழிக்குத் தான் அதன் வேதனை தெரியும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன முதுமொழி). இது கூட தெரியாத சில மூடர்கள் இன்னும் நம்நாட்டில் இருப்பது வேடிக்கையாக உள்ளது. நீங்கள் பேசிய வசை பாடியது நம் ஊடக நண்பர்களின் உள்ளங்களை எப்படி பாதித்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா?

முன்பெல்லாம் பல முந்தைய அரசாங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று பயன்பெற்ற சில ஊடக நண்பர்கள் கூட, இப்படிப்பட்ட தகவல்களை தேர்தல் காலங்களில் வெளியிடக்கூடாது என்று கருத்துச் சொன்னது விந்தையிலும் விந்தை. ஊடகத்துறையின் அடிப்படை அறிவு இல்லாத இவர்கள் எப்படி ஊடகத்துறையில் வேலை செய்கின்றனர்? அரசாங்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு முன்பு அரசாங்க பணத்தில் வயிறு வளர்த்துக் கொண்ட இவர்கள் பிறகு அதே அரசாங்க நிகழ்வுகளிலும் திட்டங்களிலும் பல காரணங்களால் நிராகரிக்கப்பட்டால் உடனே அதே அரசாங்கத்தைக் குறை கூறும் இவர்களைத் துரோகிகள் என்றுத்தானே சொல்லவேண்டும்?

இந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் என்ற முறையில் நடப்பில் இருக்கும் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பது ஒவ்வொரு அரசாங்க ஊழியர்களின் கடமை என்பதை நாம் மறந்திடக்கூடாது.

சரி அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்தார்கள். பின்னர் ஏன் தனியார் வானொலிகளும் அரசாங்கத்தை ஆதரித்தன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். Akta Komunikasi dan Multimedia 1998 (Akta 588) வாயிலாக துணை கோள்கள், இணையம் போன்றவை மூலம்செயல்படும் தகவல் ஊடகங்கள் மலேசிய பல்லூடகஆணையத்தின் (MCMC) விதிகளுக்கேற்ப செயல்படவேண்டும் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக மலேசியாவில் பெரும்பாலான தனியார் ஊடகங்களும், அரசாங்க ஊடகங்களும் அரசாங்க கட்டுப்பாட்டில் செயல்படும் ஊடகங்கள் என்பதை முதலில் அறிந்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு கேள்வி.

ஒரு வேளை நடப்பில் இருக்கும் அரசாங்கம் அவர்களின் தகவல்களை ஊடகங்களின் வாயிலாக தெரிவித்தால், இதேபோன்றுதான் நமது ஊடக நண்பர்களை தீட்டித் தீர்ப்பீர்களா? அல்லது போர் கொடி பிடித்து போராட்டம் நடத்துவீர்களா?

எனது சகோதரர்களே, உங்கள் மனக்குமுறலை வாட்ஸ்ஏப்பில் கொட்டித்தீர்த்த நீங்கள், ஏன் அப்போதே காவல்துறையிலோ, அல்லது தொடர்புடைய அரசாங்க அலுவலகங்கள் மீதோ போராட்டம் நடத்தியிருக்கலாமே? உங்களின் கூற்றுப்படி அப்போது தான் அரசாங்கம் இல்லையே, யார் உங்களைத் தடுத்திருப்பார்கள்?

பெயர், முகவரி ஏதும் இல்லாமல் வாட்ஸ்சாப்பில் குரல் பதிவேற்றம் செய்யும் உனக்கு நேரில் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட இலாகா சென்று உண்மை நிலை அறியநேரமில்லையா?

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் தீட்டினீர்களே அவர்களும் நம் ரத்தம் தான். நம் இனத்தை வஞ்சித்து நீ என்ன சுகம் கண்டாய்?

இது ஒரு புறம் இருக்க ஏன் ஊடகவியலாளர்களை கடுமையான விமர்சனம் செய்வதற்கு என்ன என்று ஆய்ந்து பார்த்தால் அரசு சார்புடைய தகவல்களை தேர்தல் காலங்களில் அதிகம் வெளியிடப்பட்டதே எனலாம். தமிழ் ஊடகங்களில் அரசாங்க தகவல்களை பகிர்ந்துக் கொண்ட செடிக் என்ற இலாகா, செடிக் தொடங்கியது முதல் இம்மாதிரியான தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருந்தால் மக்களுக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்காது. அது போக செடிக் என்ற இலாகாவின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் முழுமையாக நம் நண்பர்கள் அறிந்திடவில்லை என்பது இங்கேபுலப்படுகின்றது.

ஒவ்வோர் ஆண்டும் செடிக் பல அரசு சாரா இயக்கங்களுக்கு மானியம் வழங்கி பல திட்டங்களை செயல்படுத்தியது. ஆனால் இந்தத் திட்டங்களை குறிப்பிட்ட சிலர் மட்டுமே அறிந்திருந்தனர் எனக் கூறலாம். ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் இந்த அரசு சாரா இயக்கங்களின் திட்டங்களை மக்களுக்கு அந்தந்த ஆண்டிலேயே எடுத்துக்கூறியிருந்தால் மக்களுக்கு செடிக் திட்டங்கள் பற்றிபுரிந்திருக்கும். ஒட்டு மொத்தமாக அனைத்துத் திட்டங்களையும் தேர்தல் காலங்களில் திணித்தது மக்களுக்கு அது தேர்தல் பரப்புரையாகவே தெரிந்தது. 14-ஆவது பொதுத் தேர்தலில், மக்கள் மனதை ஊடுருவாத ஊடகமாகவே அரசாங்க ஊடகங்கள் இருந்தன என்று சொல்லமுடியும்.

இப்போது மலேசிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நம்பிக்கை கூட்டணி ஊடகத் துறைக்கு முழுச்சுதந்திரம் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். நிச்சயம் நம் நம்பிக்கை இந்த நம்பிக்கை கூட்டணியில் உயிர் பெறும் என்ற நம்பிக்கையோடு இந்த கூட்டணி ஆட்சிக்கு பிளவுபடாத ஆதரவை வெளிப்படுத்துவோம்.

குறிப்பு:

1. இப்போது ஊடகவியலாளர்கள் கூட்டணி அரசாங்க சார்புடைய தகவல்களை செவ்வனே வழங்கி வருகின்றார்கள். அவர்கள் பச்சோந்திகள் அல்ல. நடப்பு அரசாங்கத்தின் ஆணைக்கு செவிசாய்க்கும் விசுவாசிகள் என்பதை புரிந்துக்கொண்டு விவேகமாக பேசுங்கள் செயல்படுங்கள்.

2. இந்தக் கட்டுரையினை எழுதும் வரை ஊடகத்துறை குறித்த எந்த சட்டத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஊடகத்துறை நடப்பு அரசாங்கத்தின் கண்காணிப்பிலே உள்ளது.

#நம் இனத்தைத் தூற்றி பெருமைக் கொள்ளாதே

#நம் இனம் நம் உறவு

#தமிழர்களாக இருப்போம், மலேசியர்களாக வாழ்வோம்.

இது அநேகன் வாசகர் ராமநாதன் பன்னீர்செல்வத்தின் கட்டுரை! இது அநேகனின் நிலைப்பாடு அல்ல.

1 COMMENT

 1. வணக்கம்.

  ஊடகத்துறையில் செயல் படுவோர் தன்னலம் கருதி செய்த செயற்பாடுகளை தற்காப்பதை தவிர்த்து பொது அறங்கில் இலைத்த தவன்றை பொதுவிலேயே பொருத்தருளக்கோறி விளைதல் வேண்டும்.

  தன்னலக் கருத்தை பிறரது அழுத்தத்தால் எப்படி சற்றும் தயங்காது தன் பதவியை தற்காக்க சற்றும் சலிக்காமல் ஏற்கின்றனரோ அதே போன்று பொதுவில் விடப்பட்ட கருத்துகளுக்கு பொருப்பு ஏற்று பொதுவில் வரும் எதிர்மறை கருத்துக்கும் தயங்குதல் இன்றி சீரனித்தல் வேண்டும்.

  உலை வாய் மூடினும் ஊர் வாயை மூடல் முடியாது என்பது வழக்கு.
  மற்றும் பிற இனத்தாரான சீனர் மலையர் இது செய்தலில்லை என்பது பொய். ஊடகத் துறையினர் மீது கண்டனம் தெரிவிப்பது எல்லாராலும் செயப்படும் இயல்பு. எ.கா Tony Fernandez, Utusan Journalist, Tv3…

  மக்கள் குமுறலுக்கு காரணம் தமிழர்களை தமிழ் ஊடகப் பிறிவினரே ஏமாற்றினால் நம் தமிழர் யாரை நம்புவது என்பதுதான்.
  தவற்றை அறிவின் திருத்த முற்படல் வேண்டும். வீன் வாதம் செய்து உணர்த்த தூண்டுவது மின் விசிரியில் உமிழ்வதை போலே ஆகும்.

Comments are closed.