மகாதீர்-அன்வார் ஆதரவாளர்களிடையே பிரச்னையை மூட்டி ஆட்சியை கவிழ்க்க சதியா?

0
2

கோலாலம்பூர், மே 17-

அண்மையில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று துன் மகாதீர் தலைமையில் ஆட்சியை அமைத்திருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியைக் கவிழ்க்க சில தரப்பினர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, அக்கூட்டணி ஆட்சியமைத்தால் 100 நாட்களில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கூறியிருந்தது. இந்நிலையில், இந்த 100 நாளில் நம்பிக்கைக் கூட்டணி குறிப்பாக, துன் மகாதீர் தலைமையிலான மத்திய அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுக்கவும் அதன் வாயிலாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வாட்சாப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்த தரப்பினர் துன் மகாதீர் ஆதரவாளர்களாகவும் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் ஆதரவாளர்களாகவும் முகநூலில் போலி பக்கங்களைத் திறந்து ஒருவருக்கு ஒருவர் சாடி பிரச்னைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

14ஆவது பொதுத்தேர்தலில் பி.கே.ஆர். சின்னத்தில் போட்டியிட்ட நம்பிக்கைக் கூட்டணி 113 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றது. இதில், 13 தொகுதிகளை பெர்சாத்து கட்சி வென்றுள்ளது. இருந்த போதிலும், அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான துன் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்றார்.

இதனை வைத்து பி.கே.ஆருக்கும் பெர்சாத்து கட்சிக்கும் இடையில் பிரச்னையை மூட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களது சதியை நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் நம்பக்கூடாது என்றும் இத்தகவலை சமூகவலைத்தளங்களில் பகிரும்படி அந்த செய்திகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.