கோலாலம்பூர், மே 19-
வருகின்ற ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ம.இ.கா.வின் தேசியத் தலைவருக்கான போட்டியில் மேலவைத் தலைவரும் ம.இ.கா. உதவித் தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.

இன்று ம.இ.கா. தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ம.இ.கா. தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் இந்த அறிவிப்பை செய்தார்.

அண்மையில், நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பி.கே.ஆர். வேட்பாளர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாராவிடம் தோல்வி கண்டார். அதனைத் தொடர்ந்து, வருகின்ற கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என அண்மையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவிருப்பதை டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், கட்சியில் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து பல மாதங்களாக யோசித்து வந்தேன். ஆயினும், டத்தோஸ்ரீ சுப்ரமணியம் அப்பதவியைத் தற்காத்துக்கொள்ள போவதில்லை என தெரிந்து பிறகுதான் இந்த முட்இவை எடுத்தேன். என் முடிவை தாமதமாக அறிவித்தால் இன்னும் பலர் இப்பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிப்பார்கள் என நகைச்சுவையுடன் விக்கினேஸ்வரன் கூறினார்.

கட்சியின் தேசிய துணைத்தலைவர் செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. நான் எடுத்து விட்டேன் என அவர் குறிப்பிட்டார்.