புத்ராஜெயா, மே 19-
சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசார் வெகுவிரைவில் கிடைக்கவிருப்பதை நடப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆருடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேரடியாக கூறாவிட்டாலும் இன்று புத்ராஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சந்தித்து தனக்கு வழங்கப்பட்டுள்ள பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் பதவி குறித்து கலந்தாலோசித்த பிறகு செய்தியாளர்களிடம் சூசகமாக கூறினார்.

இது குறித்து அஸ்மின் அலி கூறுகையில், துன் மகாதீர் தமக்கு புதிய அமைச்சர் பதவியை வழங்கியிருப்பது தமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அடுத்த வாரம் நான் அத்துறையின் அலுவலகத்திற்கு சென்ற பிறகு நானும் துன் மகாதீரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அங்கீகரித்த அனைத்து பெருந்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு திட்டங்கள் குறித்து நாங்கள் இருவரும் கலந்தாலோசிக்கவிருப்பதாக அஸ்மின் அலி கூறினார். மக்களுக்கு நேரடியாக நன்மைகளை அளிக்கக்கூடிய மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பொது வீடமைப்பு வசதி ஆகிய திட்டங்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளிப்போம் என அவர் சொன்னார்.

14ஆம் பொதுத்தேர்தலில் சிலாங்கூர் அரசாங்கத்தை நம்பிக்கைக் கூட்டணி வெற்றிக்கரமாக தக்க வைத்துக்கொண்ட பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மே 11ஆம் தேதி அஸ்மின் அலி இரண்டாவது தவணையாக சிலாங்கூர் மந்திரி பெசாராக பொறுப்பேற்றுக்கொண்டார். புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்ற உறுப்பினரான அவர் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியையும் வென்றார்.

இந்நிலையில், பிரதமர் துன் மகாதீர் நேற்று மாமன்னரிடம் தாக்கல் செய்திருந்த அமைச்சரவை பட்டியலில் அஸ்மின் அலிக்கு பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன் வாயிலாக, அவர் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியைத் துறப்பார் என கூறப்பட்ட நிலையில் அவர் இன்று துன் மகாதீரை சந்தித்து தனது நிலைக் குறித்து விவாதிக்கவிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

துன் மகாதீரை சந்தித்த பிறகு அஸ்மின் அலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். துன் மகாதீருடனான சந்திப்பில் அவர் எனக்கு விளக்கங்களை வழங்கியதோடு எனது கடமை குறித்தும் விளக்கியிருந்தார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவக்கூடிய திட்டவரைவு, வியூகங்கள் மற்றும் முயற்சிகளை உறுதி செய்வதற்கான கூடுதல் பரிந்துரைகளை வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக அஸ்மின் அலி கூறினார்.