திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் கமல்ஹாசன் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது அவசியமில்லை என முடிவு செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக அனைத்து விவசாய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மே 19- ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். சென்னையில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்திருந்த கமல்ஹாசன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க அனைத்து கட்சிக்கூட்டம் நடத்தவில்லை என்றாலும் தொலைப்பேசி மூலமாக நாங்கள் அனைவரும் பேசி யாரும் கமல் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பங்கேற்பது அவசியமில்லை என்று முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் ஜனநாயக படுகொலை செய்தது போல கர்நாடகத்திலும் நடந்து கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. அனைத்து மாநில ஆளுநர்களும் மத்திய அரசுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுவருகிறார்கள். இது ஊர் அறிந்த உண்மை என கூறினார்.