கோலாலம்பூர், மே 19-
நஜீப்பின் பிள்ளைகளின் வீட்டில் சோதனையை மேற்கொண்ட போலீசார் அங்கு குளிர்சாதன பெட்டியில் இருந்த சாக்லெட் மற்றும் உணவுகளை போலீஸ் எடுத்து சாப்பிட்டதற்கு டத்தோஸ்ரீ நஜீப் கோபம் கொண்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது குறித்து நஜீப்பின் வழக்கறிஞர் ஹர்பால் சிங் கிரெவல் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோதனையில் போலீசின் பொறுப்பற்ற செயல் குறித்து நஜீப் கேள்வியெழுப்பியதாகவும் கூறினார்.
போலீஸ் அதிகாரிகள் குளிர்சாதன பெட்டியில் இருந்த உணவுகள் மற்றும் சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டதோடு சாப்பிடுவதற்கு உணவையும் தயார் செய்ய கூறியிருக்கின்றனர். நஜீப்பின் பிள்ளைகளின் தனிப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட படங்கள் வைரலாகியிருப்பது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நஜீப்பின் குடும்பம் நஜீப்பின் பிள்ளைகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.
பெவிலியன் அடுக்ககத்தில் நஜீப்பின் இரு பிள்ளைகளான நோர் அஷ்மான் மற்றும் நூர்யானா நஜ்வா ஆகிய இருவரும் தங்கியுள்ளதாக ஹர்பால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் போலீஸ் பறிமுதல் செய்துள்ள தங்களின் தனிப்பட்ட பொருட்களை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படி வர்த்தக குற்றபுலனாய்வு துறையிடம் வலியுறுத்தியிருப்பதாக அவர் சொன்னார்.
வலுவான ஆதாரங்கள் இல்லாமை அல்லது எவ்வித தொடர்பும் இல்லாமல் அந்த சோதனையும் அவற்றில் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஹர்பால் குறிப்பிட்டார்.
அந்த அடுக்ககத்திலுள்ள நஜீப்பின் பிள்ளைகளின் வீடுகளில் போலீஸ் மேற்கொண்ட சோதனையில் 72 பைகளில் ரொக்கம், நகைகள், 284 பெட்டிகளில் விலையுயர்ந்த கைப்பை முதலானவற்றை கடந்த வியாழக்கிழமை இரவு போலீஸ் பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் என்பதால் அதன் மதிப்பு குறித்து புக்கிட் அமான் வர்த்தக குற்றபுலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங்கால் கூற முடியவில்லை.

