டி.டி.வி. தினகரன் கைது செய்யப்படலாம்

0
10

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் நுழைந்தால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அந்த முடிவை தினகரன் திடீரென மாற்றிவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய 60 நாள் காலக்கெடு விதித்திருந்தார் டி.டி.வி.தினகரன். அவர் விடுத்த காலக்கெடு ஆகஸ்ட் 4-ம் திகதியுடன் முடிவடைகிறது. அந்த அணிகள் இணையவில்லை என்றால், ஆகஸ்ட் 5-ம் திகதி தினகரன் ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே டி.டி.வி.தினகரனின் வருகையைத் தடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நேற்று மாலை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

கட்சி அலுவலகத்துக்கு தினகரன் ஆதரவாளர்களுடன் வர நேர்ந்தால் அது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் அலுவலகத்துக்கு தினகரன் குறித்த உளவுத்துறை ரிப்போர்ட் உடனுக்குடன் கொடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் பெங்களூருச் சிறையில் சசிகலாவைச் சந்திக்க தினகரன் சென்றுள்ளார். சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தினகரன் அதிரடியான அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே ஆகஸ்ட் 5-ம் திகதி தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இதனால் சில தினங்களாக ராயப்பேட்டை அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்துக்குக் கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினகரன், தற்போது கட்சி அலுவலகம் செல்லும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தினகரனின் நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில், “கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்றால் நிச்சயம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி தரப்பு முயற்சி செய்யும். மேலும், அதைக் காரணமாகக் கருதி அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்தையும் முடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

எனவே, ஆகஸ்ட் 5-ம் திகதி கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் செல்லாமல் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்க தினகரன் முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்களைச் சந்திக்கிறார்” என்றனர்.