கோலாலம்பூர், மே 21-
கடந்த பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கு அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய பேசு பொருளாக இருந்த 1எம்.டி.பி. விவகாரத்தை அம்பலப்படுத்தியது சரவாக் ரிப்போர்ட்.

ஆனால். அந்த சஞ்சிகை அரசியல் விவகாரங்கள், சுற்றுச்சூழல், பூர்வகுடி மக்கள், மாநில ஆளுநரின் வர்த்தக தேவைகள் முதலானவை குறிக்கோளாக கொண்டு 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறிப்பாக, சரவாக் ஆளுநர் டான்ஸ்ரீ தாய்ப் மாமூட் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்து சேர்த்துள்ளதை முதன் முதலில் அம்பலப்படுத்தியதும் அந்த சஞ்சிகைதான் என்பது பலருக்கு தெரியாது.

அந்த சஞ்சிகையின் ஆசிரியரான கிளேர் ரியூகாஸ்டல்-பிரொவ்ன் 1960ஆம் ஆண்டு கூச்சிங்கில் பிறந்தவர். லண்டனில் இருக்கும் அவர் தாய்ப்பின் சொத்து விவரங்களை வெளியில் கொண்டு வந்தார். அது குறித்து பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பொழுது, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தைக் கைப்பற்றியுள்ளதால் அமலாக்கத் தரப்பினர் தாய்ப் மீதான பழைய புகார்களை மறு ஆய்வு செய்வதோடு புதிய புகார்களை பொதுமக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இப்பொழுது, பலர் அவர் மீது புகார் அளிப்பதற்கு காத்திருப்பதாக தாம் நம்புவதாக கிளேர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தற்போது, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் 1எம்.டி.பி முறைகேடு மீதான விசாரணையை தொடங்கியுள்ளார். ஆனால், தாய்ப் மீது விசாரணையை மேற்கொள்வதற்கு அவர் இன்னும் வாக்குறுதி அளிக்கவில்லை. பொதுத்தேர்தலுக்கு பின்னர் கடந்த 11ஆம் தேதி துன் மகாதீர் கோலாலம்பூரில் தாய்ப்பை சந்தித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், புதிய அரசாங்கம் இவ்விவகாரத்தில் அவசரப்பட தேவையில்லை. காரணம், புதிய அரசாங்கம் முழுமையாக அமைவதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. புதிய சட்டத்துறை தலைவர் மற்றும் இதர முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டவுடன் தாய்ப் மீதான விசாரணை தொடங்கப்பட வேண்டும். தாய்ப் மீதான விசாரணையைக் கைவிடக்கூடாது என்பது மகாதீருக்கு தெரிய வேண்டும் என நான் நினைக்கின்றேன். சரவாக்கில் தாய்ப் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களின் கோரிக்கைகள் ஒலிப்பதாக கிளேர் கூறினார்.