கோலாலம்புர், மே 21-
1எம்.டி.பி முறைகேடு குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள பிரதமர்துறை அலுவலகம் இன்று சிறப்பு குழுவை அறிவித்தது. 1எம்.டி.பி. முறைகேட்டில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணையை மேற்கொள்வதோடு வெளிநாடுகளில் இருக்கும் அந்த பணத்தை மீண்டும் திரும்ப பெறும் நோக்கில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
1எம்.டி.பி.க்கு சொந்தமான 2.6 பில்லியன் வெள்ளி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கியில் இருந்ததாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குற்றம் சாட்டி வந்தார். மேலும், அமெரிக்க நீதித்துறையும் 1எம்.டி.பி குறித்து பல விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தன்மீதான குற்றச்சாட்டை நஜீப் மறுத்தே வந்தார்.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த குழு பலரை விசாரணைக்கு அழைக்கவுள்ளது. இதில், முன்னாள் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமீடியும் அழைக்கப்படுவார் என கருதப்படுகின்றது.
காரணம், தனக்கு அரேபிய அரச குடும்பம் நன்கொடை அளித்ததாக நஜீப் முன்பு கூறியிருந்தார். அப்போது, ஸாஹிட் நஜீப்பிற்கு நன்கொடை வழங்கிய அரச குடும்பத்தை தாம் சந்தித்ததாக ஜொகூர், ஸ்ரீ காடிங் அம்னோ தொகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்டில் கூறியிருந்தார்.
தாம் சந்தித்த நபரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் மிதவாத இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையில் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நாடு மலேசியா என்ற ரீதியிலும் இதர இஸ்லாமிய நாடுகளுக்கு மலேசியா உதவி வருவதாலும் இந்நிதி வழங்கப்பட்டதாக ஸாஹிட் ஹமீடியும் கூறியிருந்தார்.
இந்த நிதி நஜீப்பிற்கு வழங்கப்பட்ட முறை மற்றும் முக்கிய ஆவணங்கள் தனக்கு காண்பிக்கப்பட்டதாகவும் ஸாஹிட் கூறியிருந்தார். இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1எம்.டி.பி. தொடர்பான விசாரணையில் அவரும் வரவழைக்கப்படுவார் என நம்பப்படுகின்றது.

