அண்மையச் செய்திகள்
முகப்பு > சிறப்புச் செய்திகள் > 14ஆவது பொதுத் தேர்தல் எப்போது?
சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

14ஆவது பொதுத் தேர்தல் எப்போது?

எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் அடுத்த பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.  இந்தாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துவார் என்பது சந்தேகமே! தேர்தலுக்கான சில தொடக்கக் கட்ட வேலைகள் ஆரம்பித்திருந்தாலும், இன்னும் சில நுணுக்கமான வேலைகள், பல தரப்பாரையும் மடக்கிப் பிடித்த பின்னர், இவ்வாண்டுக்குள் தேர்தலை நடக்காது என்றே தோன்றுகிறது.

நாடாளுமன்றத் தவணைக் காலம் முடிவுற்ற பின்னர், ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு காலத் தவணை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் பதவிக்கான சத்தியபிரமாணம் எடுத்த நாளிலிருந்து தொடங்கும். தற்பொதைய நாடாளுமன்றத் தவணை 2013 ஜூன் 24இல் இருந்து தொடங்கி அது 2018 ஆகஸ்டு 23இல் முடிவடைகிறது.

அடுத்த வாரம் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாளுக்கான ஆயத்தப் பணியில் அனைவரும் இறங்குவர். அதில் சாதாரண மக்களோடு அரசியல்வாதிகளும் அடங்குவர். அது முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். வாழ்நாளில் ஒரு முறையாவது அதனை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

தேர்தல் இயந்திரத்தைக் கொண்டு செல்லும் அரசியல் கட்சிகளின் பெரும்பாலான முக்கியத் தலைவர்கள் அந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் இருக்கமாட்டார்கள்.  ஆகஸ்டு மாதம் நாட்டின் 60ஆவது தேசிய தினம் கொண்டாடப்படவிருக்கிறது. அது எப்போதும் கோலாகலமான திருவிழா போன்றே நடத்தப்படும். அதில் அரசின் அதிகாரிகள், எல்லா மட்டத்திலிருக்கும் அனைவரும் ஈடுபட வேண்டும். அரசியலுக்காக அந்தக் கொண்டாட்டத்தை யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

தேசிய தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்படும். மக்கள் அதில் பெரும் ஈடுபாடு காட்டுவர். அதனைத் தொடர்ந்து 29ஆவது தென்கிழக்காசியப் போட்டி விளையாட்டுகளும் அதனை ஒட்டிய மாற்றுத் திறனாளிகளின் பாராலிம்பிக் என்ற போட்டியும் ஆகஸ்டு 19இல் தொடங்கி 31இல் முடிவடையும்.

அதற்கு ஆயத்தமாகக் கொடியசைக்கும் விழா, ஒற்றுமை, நல்லிணக்கம் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் அரசுப் பணியாளர்களோடு தனியார் துறையினரும் பெருமளவில் பங்கு கொள்ளவிருக்கின்றனர்.  அதனையடுத்து, அக்டோபர் மாதத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். தேர்தலில் வெற்றிபெற பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட பிரதமர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார், பல சந்தர்ப்பங்களில் அவரின் ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளின் வெற்றியைப் பறைசாற்றிய வண்ணமாகவே இருக்கிறார்.

சிக்கன நடவடிக்கை மற்றும் பொருளாதார திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரம் பெருமைப்படும் அளவிற்கு உயர்ந்து வருவதால், அனைத்துலக நிதியம் நாட்டின் மொத்த உறுபத்தி 4.5% லிருந்து 4.8% ஆக உயரும் எனக் கணித்திருக்கிறது.  2014ஆம் ஆண்டு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 6%ஆக இருந்த பின்னர் அது 2015இல் 5% ஆகச் சரிந்து, பின்னர் 2016இல் 4.3க்குச் சரிந்தது.

எனினும் மலேசியாவின் பொருளாதாரம் மீட்சி பெரும் வாய்ப்பு இருப்பதாகவே அனைத்துலக நிதியம் குறிப்பிடுகிறது. பல நிதித்துறை சார்ந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஏற்றுமதி உற்பத்தித் துறையின் வளர்ச்சியை வைத்து ஆசிய மேம்பாட்டு வங்கி மலேசியாவின் பொருளாதாரம் 4.4லிலிருந்து 4.7க்கு உயரும் எனவும் மதிப்பிடுகிறது.

மதிப்பீடுகளும் வளர்ச்சியும் பிரமாதமாக இருந்தாலும், சாதாரண குடிமக்கள் ஒவ்வொரு நாளையும் எப்படித்தான் ஓட்டுவது என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.  தற்போதைய சூழ்நிலையில் சந்தை நிலவரம் சுமாராகவே இருப்பதால் யாரும் கையிலிருக்கும் பணத்தைச் செலவிட முன்வருவதில்லை. பல நிறுவனங்கள் புதிய வேலையாட்களைச் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு வருமானம் குறைவு என்றும் லாபம் இல்லையென்றும் கதை சொல்ல ஆரம்பித்துள்ளன.

இந்தப் பிரச்னைகளை மனத்தில் வைத்துக் கொண்டு, பிரதமர் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க சில மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவிக்கக்கூடும். அது தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் என்பதை மக்களும் அறிவர்.  தேசிய முன்னணியின் அசைக்கமுடியாத வாக்கு வங்கியாகத் திகழும் அரசு ஊழியர்கள் வரவு செலவுத் திட்டத்தில் தங்களுக்குத் தேவையான சகாயம் இருக்கின்றதா என்பதை இப்போதே ஆராய முற்பட்டுள்ளனர்.

நவம்பார் மாதத்தில் பருவகால மழை பெய்யும். இவ்வாண்டு கடுமையான மழையும் அதனைத் தொடர்ந்து வெள்ளமும் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இது பெரும்பாலும் கிழக்குக்கரை மாநிலங்களை வெகுவாகப் பாதிக்கும். அந்தக் காலக்கட்டத்தில் தேர்தலை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

டிசம்பர் மாதத்தில் பள்ளி விடுமுறை காலத்தில் பெரும்பாலோர் குடும்பத்தோடு சுற்றுலாவையும் ஓய்வுக்காக வெளிநாடு களுக்குச் செல்வது வழக்கமான ஓன்று, மனிதவளம் குறைந்த நிலையில் தேர்தலை நடத்தத் தகுந்த காலமாக அது இருக்காது. இந்தச் சூழ்நிலைகளை வைத்து ஆராய்ந்து பார்த்தால், பொதுத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச்சுக்குப் பின்னர், அதுவும் சீனப் புத்தாண்டுக்குப் பின்னரே நடத்தப்படலாம் என்ற கருத்து வெளிப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன