பெட்டாலிங் ஜெயா,ஜூன் 11-
இளைஞர் ஒருவர் கை கால்களில் சரமாரியாகத் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையே காரணம் என்று கூறப்பட்டது. இச்சம்பவம், இங்குள்ள கௌானா ஜெயா, ஜாலான் பிஜேயு 1ஏ/42, லெம்பா சுபாங் சுரங்கப் பாதையில் நேற்று முன் தினம் நடந்தது.
பின்னிரவு மணி 2.00 அளவில் நடந்த இச்சம்பவத்தில் 28 வயது இளைஞர் இரு கைகள் மற்றும் இடது கால் தொடைப் பகுதியில் தாக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் முகமது ஜானி சே டின் தெரிவித்தார்.
தனக்கு எதிராக இவ்விளைஞர் போலீசில் புகார் செய்ததற்கு பழிவாங்கும் வகையில் சந்தேக நபர் இவ்விளைஞரைத் தாக்கியதாக முகமது ஜானி குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் நேற்று இரவு மணி 7.00 அளவில் இங்குள்ள ஜாலான் காசிங் உணவகம் முன் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
இங்குள்ள கோத்தா டாமன்சாரா வாகனம் நிறுத்தும் பகுதியில் மதுபானம் அருந்திக் கொண்டு கூச்சல் போட்ட ஆடவர் கும்பல் குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பின்னர் இக்கும்பலை அங்கிருந்து கலைத்தனர்” என்று அறிக்கை ஒன்றின் வழி முகமது ஜானி விவரித்தார். சந்தேகப் பேர்வழியைத் தடுத்து வைப்பதற்கு போலீஸ் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யும் என்றும் அவர் கூறினார்.
கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டாக நம்பப்படும் அவ்விளைஞரின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறியுள்ளதால் அவர் மயக்க நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
அந்த இளைஞர் சுரங்கப்பாதையில் இருந்தபோது தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பாதை நெடுகிலும் ரத்தத் துளிகள் காணப்பட்டதோடு அவரின் ஹோண்டா இஎக்ஸ் 5 ரக மோட்டார் சைக்கிள் சுரங்கப் பாதையின் வேறு திசையில் கைவிடப்பட்டுக் கிடந்ததாகவும் முகமது ஜானி தெரிவித்தார்.

