புத்ராஜெயா, ஜூன் 11-

ஜிஎஸ்டி எதிர்ப்பு டி-சட்டையை அணிந்து கொண்டு பேரணியில் கலந்து கொண்டதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட பேங்க் நெகாரா பணியாளரான கோகிலா தன்னை மீண்டும் பணியில் அமர்த்தும்படி கோரி பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தார்.

12 ஆண்டுகள் பேங்க் நெகாராவில் பணியாற்றிய இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். பார்டி சோசலிஸ்ட் மலேசியா (பிஎஸ்எம்) மற்றும் ஜெரிட் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 40 ஆர்வலர்களுடன் இணைந்து கோகிலா நேற்று பிரதமர் அலுவலகத்தில் இந்த மகஜரை வழங்கினார்.

இதனை பிரதமரின் பிரதிநிதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நான் மீண்டும் பணியில் சேர வேண்டும். நான் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டேன். நான் எந்தத் தவறோ அல்லது பேங்க் நெகாராவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று தெ ஸ்டார் இணையத் தளத்திடம் கோகிலா விவரித்தார்.

ஒரு மணி நேரத்தில் இடத்தைக் காலி செய்யும்படி கடந்த 2017 ஜூலை 19ஆம் தேதி தான் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் இது குறித்து முன்கூட்டியே தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் பேங்க் நெகாரா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடத்தின் முன்னாள் நிர்வாகியான கோகிலா கூறினார்.

அந்த ஆண்டு மே 30,31 மற்றும் ஜூன் 2 ஆகிய மூன்று நாள்களுக்கு தன் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் இந்த விசாரணையின்போது தான் தவறு ஏதும் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

ஜிஎஸ்டி எதிர்ப்பு டி-சட்டையை அணிந்ததற்கு அப்பால் 2013 ஆம் ஆண்டில் நடந்த 13 ஆவது பொதுத் தேர்தலின்போது பிஎஸ்எம் கட்சியை ஆதரித்து இரு அறிக்கைகளைத் தான் வெளியிட்டதாகவும் கூறப்பட்டது என்றார். தனது நிலை குறித்து விவரிப்பதற்காக கோகிலா மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனைப் பின்னர் சந்தித்தார்.