கோலாலம்பூர், ஆக. 4-

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து உதவிகளை வழங்கி வரும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர்.நடராஜா தெரிவித்தார்.  அந்த அடிப்படையில்தான், எதிர்வரும் செப்டம்பர் மாதம் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதவிருக்கும் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தமிழ் மொழித் தேர்வு வழிகாட்டி நூல்களை வழங்குவதாக அவர் கூறினார்.

யூபிஎஸ்ஆர் தேர்வுக்கு இன்னும் 1 மாத காலமே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் மாணவர்கள் தங்களைத் தேர்வுக்காக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்விற்காக மாணவர்கள் அதிகான பயிற்சிகளை மேற்கொண்டால்தான் மாணவர்களால் சிறந்த தேர்ச்சியைப் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி யூ.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கும் தேர்வு வழிகாட்டி இலவசமாக வழங்கப்பட்டது. யூ.பி.எஸ்.ஆர். தேர்வுக்கான 5 மாதிரி கேள்வித் தாள்களும், அதற்கான விடைகளும், மாதிரி கட்டுரைகளும் இந்த தேர்வு வழிகாட்டி நூலில் அடங்கும்.

நேற்று பத்துமலைத் திருத்தல திருமண மண்டபத்தில் இந்த புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்து பத்துமலை, அப்பர், மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  இப்பயிற்சி நூல்கள் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பும் வேளைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் கு.செல்வராஜு, சீட் இயக்குநர் டத்தோ ஏ.டி.குமரராஜா, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் பொருளாளர் அழகன், அறங்காவலர் டத்தோ.ந.சிவகுமார் உட்பட மேலும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.