கோலாலம்பூர், ஜூன் 12-
தலைநகர் பங்சாரில் செயல்பட்டு வந்த சர்ச்சைக்குரிய ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமம் விரிவான பல ஆய்வுகளுக்குப் பின்னர் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்) உரிமம் மற்றும் சிறிய வர்த்தகர்கள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் அன்வார் முகமட் ஸின் தெரிவித்தார். இது கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகத்தின் சமூகப் பொருளாதார நிர்வாக இயக்குநர் டத்தோ இப்ராஹிம் யூசோப் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறப்பட்டது.
சம்பந்தப்பட்ட உணவகத்தின் விளக்கத்தை ஆராய்ந்தோம். சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை விளக்கினார்கள். பல கோணங்களில் இதனை ஆராய்ந்த பிறகு ராஜ் வாழையிலை உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்வதே சிறந்தது என முடிவெடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாத இறுதியில் சாலையில் தேங்கியிருந்த நீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவிய ராஜ் வாழை இலை உணவக ஊழியர்களைப் பற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி மலேசியாவில் மட்டுமல்லாது அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதற்காக உணவகத்தின் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ முகநூலில் மன்னிப்பை கோரியிருந்தாலும் பங்சாரில் அமைந்துள்ள அந்த உணவகம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தால் உடனடியாக மூடப்பட்டது.
இதனிடையே, அதன் தொடர்ச்சியாகப் பெட்டாலிங் ஜெயா, செக்ஷன் 5-இல் உள்ள காசிங் உணவகம், ராஜு உணவகம் மற்றும் ஸ்ரீ பாண்டி உணவகம் ஆகியவை சுகாதாரம் காரணமாக மூடப்பட பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

