கோலாலம்பூர், ஜூன் 12-

உலுசிலாங்கூரில் அம்பாங் பெச்சாவில் நில விற்பனை முறைகேடு தொடர்பாக நேசா கூட்டுறவு கழகத்தின் தலைவர் ராஜகண்ணன் மீது அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமமையிலேயே குற்றம் சாட்டப்பட்டது.

உலுசிலாங்கூர் செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்காக ராஜகண்ணனும் அக்கூட்டுறவு கழகத்தின் பொருளாளர் கந்தசாமியும் போலீசாரால் அழைக்கப்பட்டிருந்தனர். நேசா கூட்டறவுக் கழகத்தின் தலைவர் நாஜகண்ணன் உடல்நலம் குன்றி தலைநகர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதனால் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் உலுசிலாங்கூர் நீதிமன்ற செக்ஷன் நீதிபதி அஸ்மியும் இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரிகளும் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று ராஜகண்ணன் மீதான குற்றப்பத்திரிகையை வாசித்து அவர் மீது குற்றஞ்சாட்டினர்.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுத்து அவர் விசாரணை கோரினார். மேலும் அவர் 30 வெள்ளி ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான நேசா கூட்டுறவுக் கழகத்தின் பொருளாளர் கந்தசாமி, அடுத்த வாரம் திங்கட்கிழமை கோலகுபுபாரு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்விருவர் மீதும் கூட்டுறவுக் கழக சட்டவிதியான பிரிவு 44(பி) கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமபவம் நடந்தபோது, ராஜகண்ணனின் மனைவி காந்திமதி, நேசா கூட்டுறவுக் கழகத்தின் தலைமை நிர்வாகி சரஸ்வதி, துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.