கிள்ளான், ஜூன் 12
கிள்ளான், பண்டாமாரானில் இன துவேஷம் மற்றும் நிந்தனை அடிப்படையில் பதாகையை பொருத்தியதற்காக 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

மலாய்காரர்கள் அல்லாதவர்கள் மலாய் ஆட்சியாளர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்று அந்தப் பதாகையில் எழுதப்பட்டிருந்தது என்று தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷம்சூல் அமார் ரம்லி தெரிவித்தார்.

ஜூன் 8ஆம் தேதி 22 மற்றும் 24 வயதுடைய ஆடவர்களும் நேற்று 24 மற்றும் 27 வயதுடைய இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

போலீஸ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் கிள்ளான் நகராண்மை கழக அதிகாரிகள் அந்தப் பதாகைகளை அகற்றியதாகவும் ஷம்சூல் அமார் ரம்லி தெரிவித்தார்.

இவ்வழக்கு 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டம் பிரிவு 4(1)இன் கீழ் விசாரிக்கப்படும்.

கைது செய்யப்பட்ட ஆடவர்களில் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணம் கொடுத்து பதாகையை பொருத்தச் சொன்னதாக கிள்ளான் நகராண்மை கழகத்தின் வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

கிள்ளான், ஜாலான் ஜம்புவில் ஆடவர் ஒருவர் இந்தப் பதாகையை பொருத்தும் இரு நிமிட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.