அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > கடைசி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி : சாதிப்பாரா மெஸ்ஸி?
விளையாட்டு

கடைசி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி : சாதிப்பாரா மெஸ்ஸி?

மாஸ்கோ, ஜூன்.13 –

உலகமே உற்று நோக்கி இருக்கும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி நாளை ரஷ்யாவின் மாஸ்கோவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. உலகக் கிண்ண காபந்துப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் அர்ஜெண்டினா தவிர்க்கப்படாத அணி. இந்த அணி 1978 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் கிண்ணத்தை வென்றது. அதன்பிறகு அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற்றது கிடையாது.

அர்ஜெண்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமே லியோனல் மெஸ்ஸி தான். உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களில் மெஸ்ஸிக்கு தனி இடம் உண்டு. திடலில் பந்து இவர் வசம் சென்றுவிட்டால் ஒட்டுமொத்த அரங்கமே கொக்கரிக்கும் ஒரே சொல் மெஸ்ஸி. இவர், 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக அர்ஜெண்டினா அணிக்காக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி காலிறுதிசுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

அதன்பிறகு, 2010-ஆம் உலகக் கிண்ணப் போட்டியிலும் அந்த அணி காலிறுதி சுற்று வரை சென்று மீண்டும் அதே வலுவான ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2014-ஆம் உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா நம்பிக்கையுடன் களமிறங்கியது. பார்சிலோனா அணிக்காக ஜொலிக்கும் மெஸ்ஸி தேசிய அணியான அர்ஜெண்டினா அணியில் விளையாடும் போது ஜொலிக்க தவறுகிறார் என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின.

இதனால், கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சற்று ஆதிக்கம் செலுத்தி விளையாட காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஆனால், இறுதி ஆட்டத்தில் கடந்த 2 உலகக் கிண்ணப் போட்டிகளில் வெளியேற்றப்பட்ட அதே ஜெர்மனியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது. அந்த ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த சோகத்தில் இருந்து மீள நினைத்த அர்ஜெண்டினா அணிக்கு அடுத்தடுத்து சோகங்கள் வந்தது. 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா போட்டியிலும் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்டது.

இதனால், மெஸ்ஸிக்கு எதிராக விமரிசனங்கள், ஊடகங்களின் தொடர் கேள்விகள் என தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால், வேறு வழி இல்லாமல் மெஸ்ஸி 2016-இல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சர்வதச கால்பந்து அணிக்காக விளையாட தொடங்கினார்.

இந்நிலையில், மெஸ்ஸி மீண்டும் உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்குகிறார். மெஸ்சிக்கு வயது 31 ஆகிறது. அதனால், அவரால் அடுத்த உலகக் கிண்ணப் போட்டி வரை விளையாட முடியுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 3 முறை கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த மெஸ்ஸிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.

இந்த உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் சுற்று போட்டியில் ஈகுவாட்டர் அணிக்கு எதிராக மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோலால் தான் அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. அதனால், இந்த கடைசி வாய்ப்பில் மெஸ்ஸி தனது முழு உழைப்பையும் செலவிட்டு இந்த உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன