சிப்பாங், ஆக. 4

சீ விளையாட்டுப் போட்டிக்கான தீபச் சுடர் எந்திச் செல்லும் ஓட்டம், நேற்று கே.எல்.ஐ.ஏ. 2 விமான நிலையம் ரோட் கீப் எனப்படும் ஏர் ஆசியா விமான நிலையம் வந்தடைந்தது. 29ஆவது சீ விளையாட்டுப் போட்டியின் முக்கிய ஆதரவாளராக ஏர் ஆசியா விமான நிறுவனம் திகழ்கின்றது.

நேற்று காலை கே.எல்.ஐ.ஏ. 2 விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தீபச் சுடர் 5.9 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பின் இறுதியாக ஏர். ஆசியா தலைமைச் செயல் முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தீபத்தை ஏந்தி ஓடி நிறைவு செய்து வைத்தார்.

இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஏர் ஆசியா எக்ஸ் தலைமை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் உட்பட 800 ஏர் ஆசியா பணியாளர்கள் தீபத்தை வரவேற்றார்கள். சீ விளையாட்டுப் போட்டியில் ஏர் ஆசியா ஆதரவு நிறுவனமாகத் திகழ்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் உலகில் நடக்கின்ற பல்வேறு போட்டிகளில் சீ விளையாட்டுப் போட்டி மலேசியா மீது திரும்புவதில் ஏர் ஆசியா தமது பங்கை சிறப்பாக வழங்குமென்று இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

ஒன்றாக உயர்வோம் என 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆசியான் சமூக கோட்பாட்டிற்குப் பிறகு கோலாலம்பூர் 2017 எனும் சீ விளையாட்டுப் போட்டியாக இது திகழ்கின்றது. இப்போட்டி நிச்சயம் சாதனை படைக்குமென்றும் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

சிப்பாங் கே.எல்.ஐ.ஏ. 2 விமான நிலையம் வந்தடைந்த தீபச் சுடரை ஏந்தி சிப்பாங் தேசிய முன்னணி தலைவர் டத்தோ மாசோம் பாயிங், டிங்கிள் சட்டமன்ற உறுப்பினர் ஷாரோம் ஷாரிப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ காரிம் உட்பட பலர் ஏந்தி ஓடினர்.