கோலாலம்பூர், ஜூன் 14-

தேசிய சுகாதார முறையில் உள்ள மருந்துக் கையிருப்பு தொடர்பாக அரசு விசாரணை செய்வதோடு அதன் கொள்முதல் செய்முறையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கிள்ளான் தொகுதி எம்.பி, சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

இந்த கோடிகணக்கான வெள்ளி மதிப்புள்ள மருந்துக் கையிருப்புக் குத்தகையை வசமாக்கியதில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஓர் அரசியல்வாதி மீது அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமென அவர் வலியுறுத்தினார்.

அப்படி விசாரணை செய்து இந்தத் தகவல் மட்டும் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அதனை மறுஆய்வுச் செய்ய வேண்டியது அவசியம் ஆகும் என்று பத்திரிகையாளர்களிடம் சார்ல்ஸ் தெரிவித்தார்

முன்னதாக கடந்த 2013லிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலானக் காலக் கட்டத்தில் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களில் உள்ள ஒரு முன்னாள் அமைச்சர் உட்பட முக்கிய அரசியல்வாதி ஒருவருடன் 20 நிறுவனங்கள் சம்பந்தப்படுத்தப்படுகின்றன. இதில் அவர் வெ.370 கோடி மதிப்புள்ள மருந்துக் குத்தகையைப் பெறுவதில் ஒரு முகவராக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது உண்மையில் ஒரு பெரிய விவகாரமாகும். மக்கள் மிகவும் மலிவான விலையில் மருந்துகளைக் கேட்ட போது இதுபோன்றக் குற்றச்சாட்டுகள் உண்மையில் மருந்துகளின் விலையை பெரு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் வேண்டுமென்றே உயர்த்துவதைத்தான் காட்டுகிறது. அதனால் இதனை முழுமையாக விசாரணை செய்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டார்.