கோலாலம்பூர், ஜூன்.14-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் ரகசிய வீடுகள் எனக் கூறப்பட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பு மட்டுமே 8 கோடி என வெளியாகியான தகவலில் உண்மையில்லை என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் மறுத்துள்ளார்.

குறிப்பாக கைப்பற்ற பொருட்களின் மதிப்பு இன்னும் போலீஸ் கணக்கிடப்படவே இல்லை. அப்படி இருக்கையில், இந்த செய்தியை வெளியாக்கிய பத்திரிக்கைக்கு எப்படி அதன் மதிப்பு கிடைத்தது? என அவர் கேள்வி எழுப்பினார்.

மொத்த பொருட்களின் மதிப்பையும் கணக்கிட்ட பிறகுதான் போலீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடும். அதற்குள் உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்பாதீர்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெவிலியன் குடியிருப்பிலுள்ள நஜீப்பிற்கு சொந்தமான வீடு என சந்தேகிக்கப்படும் ரகசிய வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 37 பைகளில் 433 கைக்கரடிகாரங்கள் இருந்ததாக செய்தி பரவியது. அவற்றின் மொத்த மதிப்பு 8 கோடி ரிங்கிட். அவற்றில், ஒரு ரோலேக்ஸ் கடிகாரத்தின் விலை மட்டும் 35 லட்சம் ரிங்கிட் எனக் கூறப்பட்டது. அதோடு சேசில் பர்னேல் கடிகாரத்தின் விலை 12 லட்சம் வெள்ளி என்றும் சைனா பிரேஸ் செய்தி வெளியிட்டிருந்தது.