7 விழுக்காடு லாப ஈவு;  நேசா அறிவிப்பு

0
12

கோலாலம்பூர், ஜூன் 14
நேசா கூட்டுறவு கழகம் கடந்த ஆண்டுக்கு 7 விழுக்காடு லாப ஈவுத் தொகையை அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக இந்த லாப ஈவு வழங்கப்படுவதாக நேசா இடைக்காலத் தலைவர் டாக்டர் அ.லெட்சுமணன் தெரிவித்தார்.

இன்று தலைநகரில் நேசா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

நேசா தலைவர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களால் கடந்த 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போனஸ் பங்குகளின் 5 ஆண்டுகால காலவரையறை முடிவுற்று, கடந்த ஆண்டு அங்கத்தினர்களுக்கு போனஸ் பங்குதொகையாக மொத்தம் வெ.3,214,300 வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

அதோடு, கடந்த ஆண்டு அங்கத்தினர் பிள்ளைகளுக்குக் கல்வி ஊக்குவிப்பு நிதியாக வெ.23,300 மற்றும் காலமான அங்கத்தினரின் குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு வெ.28,000 மரண சகாய நிதியும் வழங்கப்பட்டது. அதோடு, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூரில் நேசாவின் வீடமைப்பு திட்டங்களும் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று டாக்டர் லட்சுமணன் தெரிவித்தார்.

நேசா மேம்பாட்டுத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தும்பொருட்டு நேசா மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நேசா கட்டுமான நிறுவனம் என்ற இரு துணை நிறுவனங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் அவர் அறிவித்தார். போட்டியிட்ட வேட்பாளர்களில் கண்ணியப்பன் 196 வாக்குகளும், டத்தோ எம்.இராமு 192 வாக்குகளும், ஆதி நாராயணன் 192 வாக்குகளும், கந்தசாமி 190வாக்குகளும், அரியன் கோபால் 178 வாக்குகளும், பாஸ்கரன் 37 வாக்குகளும் பெற்றனர்.

மேற்காணும் முடிவுகளின்படி கண்ணியப்பன், டத்தோ எம்.இராமு, ஆதி நாராயணன், கந்தசாமி, அரியன் கோபால் அடுத்த ஓராண்டுக்கு இயக்குநர் வாரிய உறுப்பினர்களாக பதவி வகிப்பர் என்று அவர் சொன்னார்.