அனைவரிடமும் கலந்தாலோசித்த பிறகே இந்து அறப்பணி வாரியம் அமையும்! – குலசேகரன்

கோலாலம்பூர், ஜூன் 15-

மலேசியாவில் உள்ள ஆலயங்களை பராமறிக்கவும் அவர்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவே இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படவிருக்கின்றது. அதோடு மலேசியாவில் உள்ள முதன்மை ஆலயங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்தோசிக்கப்பட்ட பின்னர்தான் இந்த நடவடிக்கையானது முன்னெடுக்கப்படுமென மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறினார்.

தேசிய சங்கப் பதிவிலாகாவின் கீழ் ஆலயங்கள் செயல்படுவதைக் காட்டிலும் இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்பட்டால் நமது தேவைகளை நாமே தீர்த்துக் கொள்ளலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆலய நிர்வாகங்கள் பல்வேறான பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. அதில் தமிழ்நாட்டிலிருந்து குருக்கள்களை கொண்டு வருவதும் அடங்கும். இவர்களை நாட்டுக்கு கொண்டு வருவதிலும் பல்வேறான சவால்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் நாமே தீர்வு காண முடியும். இந்து அறப்பணி வாரியம் அமைந்தால் ஆலயங்களில் தேவைகளையும் பிரச்னைகளையும் எளிதாக எடுத்து கூற வழிவகை கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே 14ஆவது பொதுத் தேர்தலின் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படுமென வாக்குறுதி வழங்கியது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

இது அவசியமற்றது என ஆலய நிர்வாகத்தினர் நினைத்தால் இந்த திட்டம் கைவிடப்படும். அவர்கள் இதன் நன்மைகளை உணர்ந்து ஆதரவு கொடுத்தால், இந்து அறப்பணி வாரியம் நிச்சயம் அமைக்கப்படுமென குலசேகரன் உறுதியளித்தார்.

முன்னதாக, ஆலயங்களை இதர இனத்தைவர்களை காட்டிலும் இந்து அறப்பணி வாரியம் சிறப்பாக கண்காணிக்குமென மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய குடும்ப தின விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்..