பத்துகேவ்ஸ், ஜூன், 16-

மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ நடராஜா விலக வேண்டுமென வலியுறுத்தும் ஆகம ஆர்மி அமைப்பின் தலைவர் அருண் துரைச்சாமியின் பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அந்த அமைப்பு இன்னமும் பதிவு பெறவில்லை என அரசுசாரா இயக்கங்களின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

பதிவு பெறாத அமைப்பை வைத்துக் கொண்டு ஃபேஸ்புக்கில் பத்துமலை குறித்து தொடர் குற்றச்சாட்டுகளை அருண் முன்வைத்து வருகிறார். உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆலய நிர்வாகத்தை அவர் நேரடியாக அணுக வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்கள்.

நில மோசடி, உண்டியல் கணக்கு, என பல்வேறான குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகும் அருண், ஒருமுறையாவது ஆலய நிர்வாகத்தை சந்தித்து விளக்கம் கேட்டதுண்டா? அதை விடுத்து மலேசியாவில் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் பத்துமலையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என அவர்கள் எச்சரித்தனர்.

மக்கள் புகார் மையத்தின் (பார்) ஏற்பாட்டில் பத்துமலை நிர்வாகம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் கேட்க அரசு சாரா இயக்கங்களுடன் சிறப்பு விளக்கக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சர்ச்சை எழுந்துள்ள நிலம் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் டான்ஶ்ரீ நடராஜா விளக்கம் அளித்தார்.

இது குறித்து எழுந்த சந்தேகங்களை அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் கேட்டு அறிந்துக் கொண்டார்கள். டான்ஶ்ரீ நடராஜா வழங்கிய விளக்கம் மனநிறைவு அளித்ததாகவும் அவர்கள் கூறினார்கள். முன்னதாக ஆலய நிர்வாகத்தில் யார் வேண்டுமானாலும். உபயதாதர்களாக இணையலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. அதை விடுத்து, குறிப்பிட்ட ஆட்களை வைத்து கொண்டு ஆலய நிர்வாகத்தை நடத்துகின்றோம் என்ற பொய்யுரையை பரப்பக்கூடாது என டான்ஶ்ரீ நடராஜா எச்சரித்தார்.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் செயல்படுகின்றது. எந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென்றாலும் அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். அந்த அடிப்படையில் இங்கு தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.என்பதை முதலில் உணர வேண்டுமென டான்ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.

ஆலய நிர்வாகம் குறித்து, தவறான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அருண் துரைச்சாமி மீது சட்டநடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்தபோது அவரின் பெயர் கருப்புப் பட்டியலில் உள்ளது தெரிய வந்தது. அதோடு அவரது கடப்பிதழும் முடக்கப்பட்டுள்ளது என டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

ஜூன் 24ஆம் தேதி பத்துமலையில் நடக்கும் பேரணிக்கு ஆலய நிர்வாகம் அனுமதி தரவில்லை. இது சட்டவிரோதமான கூட்டம். அதனால் பதிவு பெறாத அமைப்பு நடத்தும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி கலந்து கொண்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஆலய நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

அருண் துரைச்சாமி தலைமையில் பேரணி நடந்தால், தமிழனின் அடையாளத்தை காக்க நாங்களும் அன்றைய தினம் களமிறங்குவோம் என அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் கூறினார்கள். குறிப்பாக இந்த விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டர்கள்.

1 COMMENT

  1. தமிழர் உடமை காப்பது எங்கள் தலையாய கடமை.

Comments are closed.