கோலாலம்பூர், ஜூன் 18
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி விகிதத்தை அரசு சுழியம் விகிதத்திற்குக் குறைத்ததைத் தொடர்ந்து வீடுகளின் விலை 4 விழுக்காடு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒருசில வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் வீடுகளின் விலையைக் குறைத்து விட்டனர் என்று என ஹார்த்தாபூமி.காம் இணையத் தளத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி ரட்ஸி தாஜுடின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் ஜிஎஸ்டி இருந்த போது கட்டுமானச் செலவு 4 விழுக்காடாக இருந்தது. இதில் ஜிஎஸ்டியை சுழியம் விழுக்காட்டிற்குக் குறைப்பதால் மட்டும் ஒட்டுமொத்தச் செலவுகளைக் குறைத்து விட முடியாது.

இருந்த போதிலும் வரும் செப்டம்பரில் விற்பனைச் சேவை வரியை (எஸ்எஸ்டி) அரசு அறிமுகப்படுத்த இருப்பதால் இந்த விலைக் குறைப்பும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றே நம்பப்படுகிறது.

இப்படி இருக்கும் போது இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் கனவு வீட்டை மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று தமது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ரட்ஸி தாஜுடின் குறிப்பிட்டார்.

இதில் வீடுகளின் விலை இப்போது இருப்பதைக் காட்டிலும் சற்று உயரும், ஆனால் அது ஜிஎஸ்டி இருந்ததைப் போல் ஒரே மாதிரியாக இருக்காது. இதற்கு முக்கியக் காரணம் ஜிஎஸ்டி என்பது வரியின் மீது விதிக்கப்படும் வரியாகும் என ரட்ஸி தாஜுடின் மேலும் கூறினார்.