கோலாலம்பூர், ஜூன் 18
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி சுழியம் விகிதத்திற்குக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து காய்கறிகள், இறைச்சி உட்பட இதர அத்தியாவசியப் பொருள்களின் விலை 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டு விட்டதை விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹுடின் அயூப் நிரூபிக்க வேண்டும் என எம்சிஎம் எனப்படும் மலேசிய பயனீட்டாளர்கள் இயக்கத்தின் தலைவர் டர்ஷான் சிங் டில்லோன் தெரிவித்தார்.

இதில் அனைத்து வகையான பொருள், சேவைகளுக்குமான ஜிஎஸ்டியை பக்காத்தான் ஹராப்பான் புதிய அரசு அகற்றுவதற்கு முன்பாகவே நிறைய புதிய உணவுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்கப்பட்டு விட்டது.

இந்த விவகாரத்தில் அமைச்சரின் அறிக்கை சற்று முதிர்ச்சியற்ற தன்மையில்தான் இருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்திற்கும் குறைவான காலக் கட்டத்தில் 50 விழுக்காடு வரை சிக்கனத்தை ஏற்படுத்துவது என்பது அதிசயமான ஒன்றாகும்.

அப்படி அவர் அறிக்கையில் குறிப்பிட்டபடி பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ள சில தகவல்கள் இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று பத்திரிகையாளர்களிடம் டர்ஷான் சிங் குறிப்பிட்டார்.