கோலாலம்பூர், ஜூன் 19-

நிதி ஒதுக்கீடுகள் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (பினாஸ்) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்கப்படுமென தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டுக்கான பினாஸ் அமைப்புக்குரிய நிதி ஒதுக்கீடுகள் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் எம்.ஏ.சி.சி. விசாரணை நடத்துகிறது. ஜூன் 7ஆம் தேதி பினாஸ் தலைமையகத்தில் எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த விவகாரத்தை எம்.ஏ.சி.சி. விசாரிக்க விட்டு விடுவோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். பினாஸின் கடந்த கால நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் எம்.ஏ.சி.சி. விசாரிக்கும் என்றார் அவர்.பினாஸை வலுப்படுத்தக் கூடிய பரிந்துரைகளை தமது அமைச்சு ஏற்றுக்கொள்ளும். அமைச்சின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் எந்த துறையிலும் எந்த வகையான முறைகேடுகளும் நிகழ்வதை சகித்துக்கொள்ள மாட்டோம்என்று அவர் குறிப்பிட்டார்.