வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிரச்னைக்குரிய சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி!
அரசியல்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிரச்னைக்குரிய சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி!

கிள்ளான், ஜூன் 19–
சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியானது பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் உருவாக்கியது என்பதை வரலாறு சொல்லும் கதையாகும். 1964 முதல் 1976 வரை மந்திரி பெசாராக இருந்த டத்தோ ஹருண் இட்ரிஸ் பல பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது.

அவரின் மீது 6 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 1981இல் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அரச மன்னிப்பின் வழி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

1976லிருந்து 1982 வரை இரண்டு தவணைகளில் மந்திரி பெசாராகப் பதவி வகித்த டத்தோ ஹோர்மாட் ராபி, 1982லிருந்து 1986 வரை பதவி வகித்த டான்ஸ்ரீ அகமட் ரஸாலி முகமட் அலி மற்றும் டான்ஸ்ரீ முகமட் முகமட் தைப் 1986லிருந்து 1997 வரை பதவியில் இருந்தவர்கள் ஆவர். பதவிக் காலத்தில் அவர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

மைக் டைசன் என்று வர்ணிக்கப்பட்ட முகமட் முகமட் தைப் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, பெரும் பணத்தைத் தம்மோடு கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

3 மில்லியன் டாலர் ரொக்கத்தை அந்நாட்டுக்குக் அறிவிக்காமல் கொண்டு சென்றார் என்ற குற்றம் அவரின் மீது சுமத்தப்பட்டது. எனினும் அக்குற்றத்தின் மீது அவருக்கு நீதிமன்றம் எவ்விதத் தண்டனையும் விதிக்கவில்லை.

அப்போது உள்ளூர் வர்த்தகம் பயனீட்டாளர் விவகார அமைச்சராக இருந்த டான்ஸ்ரீ அபு ஹாசான், பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பெசாரான அவர் 2000 ஆண்டு பாலியல் விவகாரத்தின் காரணமாகப் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. எனினும் அதனை நிராகரித்த நிலையில், தமது உடல்நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகுவதாகத் தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரபலமில்லாத பல் வைத்தியரான, சிலாங்கூர் சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் கிர் தோயோ 12ஆவது மந்திரி பெசார் பதவியை ஏற்றுக் கொண்டார். 2008ஆம் ஆண்டில் பக்காத்தான் கையில் சிலாங்கூர் மாநிலம் விழும் வரையில் அவர் அந்தப் பதவியில் இருந்துள்ளார்.

சிலாங்கூரின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர் மீது 2010இல் ஊழல் புகார் சுமத்தப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர்,அவரின் டத்தோஸ்ரீ விருதை மாநில சுல்தான் மீட்டுக் கொண்டார். எனினும் 6 மாதச் சிறைத் தண்டனைக்குப் பின்னர் அவர் 2016இல் பாரோல் திட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டார்.

பக்காத்தான் சிலாக்கூரைக் கைப்பற்றிய பின்னர், பிகேஆரின் செயலாளராக இருந்த டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.

அவர் எந்த ஊழல் பிரச்னையிலும் சிக்காமல் இருந்தாலும், காஜாங் இடைத்தேர்தல் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு அதன் மூலம் டத்தோ அன்வார் இப்ராஹிம் சிலாங்கூரின் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதில் காலிட் பலிகடாவாக ஆக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன