புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய உணவகங்களில் உள்நாட்டினரே சமையல்காரர்களாக அமர்த்தப்பட வேண்டும் -அமைச்சர் குலசேகரன் வலியுறுத்து
முதன்மைச் செய்திகள்

இந்திய உணவகங்களில் உள்நாட்டினரே சமையல்காரர்களாக அமர்த்தப்பட வேண்டும் -அமைச்சர் குலசேகரன் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 21
நாட்டிலுள்ள அனைத்து இந்திய உணவகங்களிலும் உள்நாட்டினரை சமையல்காரர்களாக நியமிக்கும் திட்டத்தை மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்தார்.

உணவகங்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறை குறித்து விவாதிப்பதற்காக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்துடன் இணைந்து இதர 11 வர்த்தக சங்கங்கள் இன்று குலசேகரனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தின. முன்னதாக, மலேசியாவிலுள்ள அனைத்து இந்திய உணவகங்களும் உள்நாட்டினரை சமையல்காரர்களாக பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை குலசேகரன் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்த உணவக உரிமையாளர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி தொடங்கி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து உணவகங்களிலும் சமையல்கார்களாகவும் துணை சமையல்காரர்களாகவும் உள்நாட்டினர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

‘‘அடுத்த ஆண்டு தொடங்கி அந்நிய தொழிலாளர்களை சமையல்காரர்களாக வைத்து உணவகத்தை நடத்தும் உரிமையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அரசு ஆய்வு செய்யும் என்றார் அவர்.

பினாங்கு மாநிலத்திலுள்ள அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் தொழிலாளர்கள்தான் வேலை செய்து வருகின்றனர். அதே போன்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இந்திய உணவகங்களிலும் உள்ளூர் சமையல்கார்கள் அமர்த்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொழிலாளர் பற்றாகுறை பிரச்னை குறித்து மனித வள அமைச்சு மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தும் என்றும் குலசேகரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன