அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அடுத்த வாரம் குலாவுடன் சந்திப்பு!

கோலாலம்பூர், ஜூன் 24-

அந்நிய தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் ஆட்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து அடுத்த வாரம் மனிதவள அமைச்சர் குலசேகரனுடன் சந்திப்பு நடத்தப்படும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துசாமி, செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கம், மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் உட்பட 11 வர்த்தக இயக்கங்கள், மனிதவள அமைச்சர் குலசேகரனுடன் ஜாலான் காசிங் லோட்டஸ் உணவகத்தில் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினர். அதற்கு முன்னதாக, இவ்வாண்டு இறுதிக்குள் சமையல்காரர்களாக உள்ளூர்வாசிகளை அமர்த்துமாறு குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

அதனால், இங்குள்ள உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து அவரிடம் தெரிவித்தோம். அதனை முழு மனதாக ஏற்றுக் கொண்ட அவர், இதன் தொடர்பில் விவாதிக்க தாமும் தமது அமைச்சின் அதிகாரிகளும் தயாராக இருப்பதாகவும் கூறினார். வேலைக்கு உள்ளூர்வாசிகளை அமர்த்துவது ஆலோசனைதான். அது இன்னும் திண்ணமாக முடிவு செய்யவில்லை என முத்துசாமி குறிப்பிட்டார்.

உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்த வேண்டும் என இந்திய உணவக உரிமையாளர்கள் விரும்புகிறார்கள். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வந்துள்ளோம். திறன்மிக்க சமையல்காரர்களை அடையாளம் காண்பது எளிதான காரியம் அல்ல. அதனால், உடனடியாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பதிலாக உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்துவது ஏற்புடையதாக இருக்காது. ஆனால், இதனை கட்டம் கட்டமாக செயல்படுத்த அனைவரும் தயாராக இருக்கிறோம். அதற்கான ஆள்பலத்தை அரசுதான் உருவாக்கித் தர வேண்டும் என முத்துசாமி கேட்டுக் கொண்டார்.

உள்ளூர்வாசிகளுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். திறன்மிக்க பணியாளர்களுக்கு 3,000 வெள்ளிக்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், மலேசியாவில் எவ்வளவு திறன்மிக்க சமையல் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் உணவகத் தொழிலை நடத்துவது பின்விளைவுகளைக் கொண்டு வரும். இதை அமைச்சர் குலசேகரனும் உணர்ந்துள்ளார். அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும். பின்னர் அரசு எம்மாதிரியான நடவடிக்கையை முன்னெடுக்கிறதோ அதற்கு நாங்கள் மட்டுமல்ல, அனைத்து உணவக உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என முத்துசாமி கூறினார்.

ஆனால், இப்போது அந்நிய தொழிலாளர்கள் இன்றி இத்தொழிலை நடத்துவது மிகவும் கடினம். அதற்கு உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

உணவகத் தொழிலில் தொடர்ந்து மேம்படுவதற்கு ஒவ்வொரு உணவக உரிமையாளர்களுக்கும் தலா 10 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதனை மனிதவள அமைச்சு பரிசீலனை செய்ய வேண்டும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பலர் தங்களது வியாபாரத்தை நிறுத்திவிட்டார்கள். இன்னும் சிலர் அந்நிய தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என காத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு, ஒருவ உரிமையாளருக்கு 10 அந்நிய தொழிலாளர்களை வழங்க மனிதவள அமைச்சு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அயுப் கான் கேட்டுக் கொண்டார். உள்ளூர் தொழிலாளர்கள் உணவகத் தொழிலில் ஈடுபட தயக்கம் காட்டுகிறார்கள். அவர்களை வேலைக்கு அமர்த்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.