கோலாலம்பூர், ஜூன் 28-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் நிழற்படம் அடங்கிய டைம்ஸ் இதழில் போலி முகப்பட்டையை ஈராண்டுகளுக்கு முன்பு தன்னுடைய முகநூலில் பதிவேற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சுங்கை பூலோ தொகுதி எம்.பி, ஆர்.சிவராசாவை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அக்குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.

சிவராசா எதிர்நோக்கியுள்ள இரு குற்றச்சாட்டுகளையும் மீட்க ஒப்புக் கொள்வதாக மலேசிய தொடர்புப் பல்லூடக ஆணையத்தின் துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமட் சொபியான் ஸக்காரியா கூறியதைத் தொடர்ந்து நீதிபதி ஸாமான் முகமட் நோர் இத்தீர்ப்பை வழங்கினார்.

இதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட சிவராசாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து நீதிமன்றம் விடுவிக்கிறது என என நீதிபதி தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கடந்த ஜூன் 20ஆம் தேதி சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு கடிதம் அனுப்பி இருக்கிறது என முகமது சோபியான் முன்னதாக நீதிமன்றத்தில் கூறினார்.

இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த சட்டத்துறைத் தலைவர் தரப்பு அவ்விரு குற்றச்சாட்டகளையும் மீட்டுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தது என அவர் குறிப்பிட்டார். கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய முகநூலில் நஜீபின் நிழற்படம் அடங்கிய டைம்ஸ் இதழின் போலி முகப்பு அட்டையைப் பதிவேற்றம் செய்ததாகக்கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 2016 ஏப்ரல் 15ஆம் தேதி சிவராசா மறுத்தார்.