புகார் கிடைத்தால் தாயிப் மீது நடவடிக்கை! – துன் மகாதீர்

ஜகார்த்தா, ஜூன் 29 –

சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டால், அது பற்றி விசாரணை நடத்தப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

துன் அப்துல் தாயிப் மஹ்முட் மாநில முதலமைச்சராகப் பதவியில் இருந்தபோது, அரசுப் பணத்தை ஊழல் செய்துதான் சொத்து சேர்த்திருக்கிறார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அவர் சம்பந்தமாகப் புகார் அளிக்கப்படவில்லை. முறையான புகார் இல்லாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேளை அவர் மீது புகார் அளிக்கப்பட்டால், அதனையடுத்து அரசாங்கம் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் பாராட்டக்குரியவை. அதேவேளை, சரவாக்கில் பெருமளவில் ஊழல் செய்த துன் தாயிப் மஹ்முட்டுக்கு எதிராகவும் பக்காத்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சரவாக் மக்கள் எதிர்ப்பார்ப்பதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஜகார்த்தாவில் துன் மகாதீரிருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.