வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மலேசியா வந்தேன்! இசைஞானி இளையராஜா
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே மலேசியா வந்தேன்! இசைஞானி இளையராஜா

பிரிக்பீல்ட்ஸ், ஆக.6-

     2013ஆம் ஆண்டு மைஹிவன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில் கிங் ஆஃப் கிங் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இறுதி நேரத்தில் நான் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும், மலேசிய ரசிகர்களை நேரடியாக வந்து சந்திப்பேன் என அப்போது வாக்குறுதி அளித்திருந்தேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தற்போது  மலேசியாவிற்கு தாம் வந்துள்ளதாக இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.

     அக்டோபர் 7ஆம் தேதி இசைஞானி இளையராஜா தலைமையில் “ராஜா டெ ஓன் மேன் ஷோ” எனும் மாபெரும் இசை நிகழ்ச்சி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடக்கவிருக்கின்றது. இந்த இசை நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை இரவு மணி 8.30 அளவில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மேற்கண்டவாறு கூறினார்.

     இறைவன் நான் இசை பணியை செய்ய வேண்டும் என கருதி என்னை இசைத்துறையிலே போட்டு விட்டான். அதனால், என்னுடைய இசையிலிருந்து நீங்கள் யாரும் எப்பவும் தப்பிக்க முடியாது. கேட்க வேண்டியது உங்கள் விதி என புன்னகையுடன் இசைஞானி சொன்னார். என்னிடமிருந்து இசை எப்படி வருகின்றது என்பது எனக்கு தெரியாது. ஆனால், அந்த இசையை நீங்கள் ரசிக்கின்றீர்கள். உங்களுக்காக என்னுடைய இசையை வழங்கிக் கொண்டிருப்பேன் என இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.

     தொடர்ந்து, ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்நிகழ்ச்சியில் “இதயம் ஒரு கோயில்; உங்கள் இதயம் ஒரு கோயில்” என பாடி மலேசிய ரசிகர்களை மகிழ்வித்தார் இசை வித்தகரான இசைஞானி.

     இந்நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் கூறுகையில், இசைஞானி 70களிலிருந்து இசை அமைக்கத் தொடங்கிய நிலையில் இன்று வரையில் அவரது இசைக்கு இக்கால இளைஞர்கள் வரையில் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய இசைக்காகவே நாம் காதல் செய்யவும் காதல் தோல்வியும் அடையலாம். அந்த அளவிற்கு உணர்வுப்பூர்வமான பல பாடல்களை அவர் தமிழ் இசை பிரியர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

     இந்நிகழ்ச்சியில் பேசிய மைஹிவன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீட் கூறுகையில், மலேசிய ரசிகர்களுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இசைஞானி இளையராஜாவை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை இறைவன் எனக்கு வழங்கியதற்கு தாம் பெருமையடைவதாக குறிப்பிட்டார்.

     இசைஞானியின் இந்த இசை நிகழ்ச்சி நிச்சயமாக மலேசிய ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருக்கும். இந்த அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ராஜா டெ ஓன் மேன் ஷோ எனும் மாபெரும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் நாடு தழுவிய நிலையில் விற்பனை செய்யப்படும் என ஷாகுல் ஹமீட் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன