கோலாலம்பூர், ஜூலை 1-

சமூக வலைத் தளங்களில் கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பாகப் பேசப்பட்ட கிளந்தானைச் சேர்ந்த 11 வயது சிறுமியின் திருமணம் சட்ட ரீதியில் செல்லுபடியாகாது என்று துணைப் பிரதமர், டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா திட்டவட்டமாகக் கூறினார்.

இதற்கு முக்கியக் காரணம் இத்திருமணத்தில் தன் மகள் மிகவும் வயதான ஒருவருக்கு மனைவியாகுவதற்கு அனுமதிப்பதாக நீதிமன்றத்திலிருந்து தந்தையின் அங்கீகாரம் கிடைக்காததோடு அச்சிறுமிக்கு இப்போதுதான் 11 வயதாகிறது.

இத்திருமணம் செல்லுபடியாகாது என்பதால் அவர்களைப் பிரித்து விட வேண்டும் என்று செத்தியாவங்சா சிறு சதுக்கத்தில் 2,000 ஆதரவற்ற சிறார்களுடனான நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் வான் அஜிஸா குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமியக் குடும்பச் சட்டத்தின்படி திருமணம் புரிய ஆண்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் பெண்களுக்கு 16 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் குறைந்த வயதுள்ளவர்களாக இருந்தால் நீதிமன்றம் மற்றும் அவர்களின் பெற்றோர் ஒப்புதல் இருந்தால் மட்டுமே திருமணம் செய்ய அனுமதிக்கப்படும்.

முன்னதாக இந்த 11 வயது சிறுமி 41 வயது ஆடவருடன் செய்துக் கொண்ட திருமணம் பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாகியது.