புதுடெல்லி, ஜூலை 1
காவிரி ஆணையத்தின் முதலாவது கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்கள் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
கூட்டத்துக்கு மத்திய நீர்வள கமிஷன் தலைவர் எஸ். மசூத் உசைன் தலைமை தாங்குகிறார். காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள கமிஷன் முதன்மை பொறியாளர் நவீன்குமார் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளான நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல முதன்மை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளனர். இதே போல் கேரளா, புதுவை மாநில பிரதிநிதிகளும் டெல்லி சென்றுள்ளனர்.
நாளைய கூட்டத்தில் இதுவரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை அளவு, அணைகளின் நீர்மட்டம், திறக்கப்பட்ட நீரின் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
மேலும் ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நீரின் அளவு போன்றவை பற்றி முடிவு எடுக்கப்படும். தமிழகத்துக்கான ஜூலை மாத நீரின் அளவை 10 நாட்கள் இடைவெளியில் 3 தவணைகளில் திறக்க உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

