நஜிப்பின் குற்றச்சாட்டுக்கு விரைவில் பதில் அளிப்பேன் – செத்தி அக்தார் !

0
4

கோலாலம்பூர், ஜூலை.3 –

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கி கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் இருந்தது குறித்து தமக்கு தெரியும் என கூறப்படுவது தொடர்பில் தாம் எந்த ஒரு கருத்தையும் வெளியிட விரும்பவில்லை என பேங்க் நெகாராவின் முன்னாள் ஆளுநர் டான் ஶ்ரீ செத்தி அக்தார் அசிஸ் தெரிவித்துள்ளார்.

அந்த பணம் தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் அது குறித்து கருத்துரைக்க தாம் விரும்பவில்லை என அவர் சொன்னார். ஆனால் ஒரு கட்டத்தில் அது குறித்து உங்களுக்கு என்னுடைய பதில் கிடைக்கும் என செத்தி அக்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் செவ்வாய்கிழமை பெருமக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செத்தி இவ்வாறு தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தமது வங்கி கணக்கில் , 2.6 பில்லியன் ( 260 கோடி ரிங்கிட் ) வரவு வைக்கப்பட்டது குறித்து  செத்தி அக்தாருக்கு தெரியும் என நஜிப் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

 ஆனால் இந்த விவகாரம் குறித்து அவர் அப்போது எந்த ஒரு கேள்வியையும் எழுப்பவில்லை என நஜிப் தெரிவித்தார். இந்த நிதி குறித்து பேங்க் நெகாராவுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் அதன் மூலம் குறித்து சந்தேகம் இருந்திருந்தால் அதனை தம்மிடம் தெரிவித்திருக்கலாம் என நஜிப் கூறினார். அவர்கள் அதனை கேள்வி எழுப்பாததால் நான் அதனை ஒரு பிரச்சினையாக கருதவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் செத்தி அக்தார் தமக்கு எந்த ஓர் எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என நஜிப் உறுதியாக தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த 260 கோடி ரிங்கிட், சவூதி அரேபிய அரச குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நன்கொடை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக நஜிப் கூறினார். 13 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் , 62 கோடி அமெரிக்க டாலரை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.