திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > 12 வயது சிறுவனை 6 நாட்கள் சிறையில் அடைத்த கொடூரம்! சமூக இயக்கங்கள் கடும் கண்டனம்!
முதன்மைச் செய்திகள்

12 வயது சிறுவனை 6 நாட்கள் சிறையில் அடைத்த கொடூரம்! சமூக இயக்கங்கள் கடும் கண்டனம்!

கோலாலம்பூர், ஜூலை 3

தலைநகரில் உள்ள செராஸ் என்எஸ்கே பேராங்காடியில் கடந்த மே மாதம் 25ஆம் அதேதி கத்தியை எடுத்ததற்காக பாதுகாவலர்களால் இரு இந்திய சிறுவர்கள் தாக்கப்பட்டனர். பின்னர் 30 பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் அவர்களை மிரட்டியுள்ளனர்.

பின்னர் தர்ஷன் கணேசன் (வயது 12) அவரது அண்ணன் கார்த்திக் ஷாண் (வயது 15) ஆகிய இருவரும் 6 நாட்கள் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமைக்கு எதிரான செயல் என்று ஒன்றுபட்ட இந்திய சமூக இயக்கத்தை சேர்ந்த உமா காந்தன் கூறினார்.

பேரங்காடியில் பொருட்கள் திருடப்பட்டால், அது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும். யாரையும் அடிப்பதற்கு இங்கு எவருக்கும் உரிமையில்லை. முன்னதாக தர்ஷனை 4 பேர் தாக்கியுள்ளார்கள். அவர் அங்கிருந்து ஓடிவிட அவரை தேடிச் சென்று, அவரது வீட்டில் இருந்த அண்ணனையும் கேட்டுக்கு வெளியே இழுத்து வந்து அடித்துள்ளார்கள்.

அச்சமயம் வீட்டில் இருந்த இந்த சிறுவர்களின் தந்தை கணேசன், மகனை  தாக்கியவர்களை  தடுத்து வைத்துள்ளார். இது குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்க அவர் நினைத்தபோது, அந்தப் பேரங்காடியை சேர்ந்த 30 பாதுகாவலர்கள் அவர்களின் வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள். அவர்களின் 4 பேர் கையில் துப்பாக்கியை ஏந்தி வந்துள்ளார்கள். இது மிகப் பெரிய குற்றமென உமாகாந்தன் கூறினார்.

பின்னர் அங்கு வந்த போலீஸ், பிரச்னையை தீர்த்து வைப்பதாகக் கூறி, இந்த சிறுவர்களை கைது செய்து 6 நாட்கள் போலீஸ் காவலில் தடுத்து வைத்துள்ளார்கள். சிறுவர்களை கைது செய்தால் அவர்களுக்கான சிறையில்தான் அடைக்க வேண்டும். ஆனால் பொதுவான சிறையில் மற்ற கைதிகளுடன் இந்த இருவரும் இருந்துள்ளார்கள். அங்கு அவர்கள் பகடிவதை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த இரண்டு சிறுவர்களையும் தாக்கும் போது, இனவாதமான வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் பேரங்காடி தரப்பு பாதுகாவலர்கள் முதலில் புகார் செய்ததால், இந்த இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த சம்பவத்தை எப்படி அணுக வேண்டுமென இவர்களுக்கு தெரியவில்லை. அதனால் போலீஸ் புகாரை இவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்போது இந்த சம்பவம் தொடர்பில் 3 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் உமாகாந்தன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இருவரும் தனித் தனியாக போலீஸ் புகார் செய்துள்ளார்கள். அதோடு அவரது தந்தையும் போலீஸ் புகார் செய்துள்ளார். சிறுவர்களை 6 நாட்கள் சிறையில் அடைத்தது தவறான செயலாகும். இது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். இவர்களைப் பற்றி  பள்ளியில் விசாரித்தபோது எந்த குற்றச் செயல்களிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் துரிதமான விசாரணை அவசியம். அப்பேரங்காடியும் இதற்கு பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அமைதி மறியலிலும் ஈடுபடுவோம் என உமாகாந்தன் கூறினார். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களுக்கு சமூக இயக்கங்களை சேர்ந்த பிடி கானா, தினேஷ் செல்வராஜூ, பூவன் டிக்கோம் லௌர்டெஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன