கோலாலம்பூர், ஜூலை.4 –

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது இன்று மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் வேளையில் ஓர் அதிகார முறைக்கேடு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பொறுப்புகளை வகித்தப்போது, நஜிப் ஓர் அரசாங்க ஊழியர் என்ற முறையில், எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்த 400 கோடி ரிங்கிட்டில் மோசடி செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தபோது 2 கோடியே 70 லட்சம், 50 லட்சம் ரிங்கிட் மற்றும் ஒரு கோடி ரிங்கிட் என மூன்று முறை அவர் நம்பிக்கை மோசடி புரிந்ததாக அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட நஜிப்பிடம் ஆங்கில மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் ஆங்கிலத்தில் வாசிக்கப்படுவதற்கு தேசிய சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் நீதிபதியிடம் அனுமதிப் பெற்றார்.

2009 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் செக்‌ஷன் 58 சட்டத்தின் கீழ் நஜிப் மீது குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதே சட்டத்தில் செக்‌ஷன் 23-ன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை வகித்தபோது எஸ்.ஆர்.சி இண்டர்நேஷன்ல் நிறுவனம், ஓய்வு நிதி வாரியத்தில் இருந்து 400 கோடி ரிங்கிட் கடன் பெறுவதற்கு உத்தரவாதம் அளித்ததுடன் அதற்காக தனது பதவியைப் பயன்படுத்தி, 4 கோடி 20 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு நீதிபதி டத்தோ சைனால் அபிடின் கமாருடின் அனுமதி அளித்தார்.