புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > பிரேசிலை வீழ்த்தி 2ஆவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

பிரேசிலை வீழ்த்தி 2ஆவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்!

மாஸ்கோ, ஜூலை 7-

இவ்வாண்டுக்கான உலகக் கிண்ணத்தை வெல்லுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணியை வீழ்த்தி, பெல்ஜியம் அரையிறுதிக்குள் நுழைந்தது.

கஸான் அரங்கில் நடந்த இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியம் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் தொடங்கிய 13ஆவது நிமிடத்தில் பெனாடினோ சொந்த கோல் அடித்ததால் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் முன்னிலை பெற்றது.

ஆட்டத்தை சமப்படுத்த வேண்டுமென பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்ததால், அவ்வணியின் தற்காப்பு பகுதி பலத்தை இழந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி திடீர் தாக்குதலை முன்னெடுத்தது. அப்போது பெல்ஜியம் அணிக்கான 2ஆவது கோலை மன்செஸ்டர் சிட்டியின் மத்திய திடல் ஆட்டக்காரரான கேவின் டி பூர்னே அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் அணிக்குச் சாதகமாக முடிந்தது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் முழு ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரேசில் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஆனால் அதை அனைத்து தாக்குதல்களையும் பெல்ஜியம் அணியின் கோல் காவலர் கொத்துவா தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் 76ஆவது நிமிடத்தில் பிரேசில் அணிக்கான கோலை மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய அகுஸ்தோ அடித்தார்.

இந்த கோலினால் மீண்டும் ஆட்டம் சூடு பிடித்தது. அதன் பிறகும் பிரேசில் அணிக்கு கோல் புகுத்த பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதை பிரேசிலின் தாக்குதல் ஆட்டக்காரர்கள் தவறவிட்டார்கள். இறுதி நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் புகுத்த முடியவில்லை. இதனால் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது.

1986ஆம் ஆண்டு பெல்ஜியம் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறியது. ஆனால் அர்ஜெண்டினாவிடம் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் அது தோல்வி கண்டது. அதன் பிறகு அவ்வணி உலகக் கிண்ணப் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கிடையாது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் அவ்வணி அர்ஜெண்டினா அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு பெல்ஜியம் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்திருப்பதால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜூலை 11ஆம் தேதி பின்னிரவு 2 மணிக்கு நடக்கும் அரையிறுதிச் சுற்றில் பெல்ஜியம் – பிரான்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன