உலகக் கிண்ணம் : ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷியா!

மாஸ்கோ, ஜூலை 8-

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் உபசரணை நாடான ரஷ்யாவை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஃபிஸ்ட் அரங்கில் நடந்த 4ஆவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யா – குரோஷியா அணியை சந்தித்து விளையாடியது. ஆட்டம் தொடங்கியதும் இரண்டு அணிகளும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் 31ஆவது நிமிடத்தில் ரஷ்யா அணிக்கான கோலை டேனிஸ் ஷெரிபேப் அடித்தார்.

ஆனால் அந்த மகிழ்ச்சியை ரஷ்யாவின் ரசிகர்களால் நீண்ட நேரம் கொண்டாட முடியவில்லை. 39ஆவது நிமிடத்தில் குரோஷியா திடீர் தாக்குதலை முன்னெடுத்து கராமாசிக் மூலம் ஆட்டத்தை சமப்படுத்தியது. முதல் பாதி ஆட்டம் சமநிலையில் முடிந்த வேளையில், பிற்பாதியில் இரண்டு அணிகளும் கோல் புகுத்த கடுமையாக முயற்சி செய்தன. குறிப்பாக குரோஷியா அணி ஆட்டத்தை முழுமையுமாக ஆக்கிரமித்து, தொடர் தாக்குதல்களை தொடுத்தது. ஆனால் அவ்வணியால் கோல் புகுத்த முடியவில்லை.

ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், நடுவர் கூடுதலாக 30 நிமிடங்களை வழங்கினார். இதனிடையே 101ஆவது நிமிடத்தில் குரோஷியா அணிக்கான கோலை டொமொ வீடா அடித்தார். பிற்பாதியின் 115ஆவது நிமிடத்தில் ரஷ்யா அணிக்கான கோலை மரியோ பெனான்டெஸ் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை ஆனது.

கூடுதல் நிமிடத்திலும் இரண்டு அணிகளும் வெற்றியை உறுதி செய்யாததால், நடுவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இதில் 4-3 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று உலகக் கிண்ண போட்டியில் இரண்டாவது முறையாக அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. முன்னதாக 1998ஆம் ஆண்டு அவ்வணி 3ஆம் நிலை பெற்றியாளராக வாகை சூடியது.

ஜூலை 11ஆம் தேதி பின்னிரவு நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் மோதும் வேளையில் ஜூலை 12ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை குரோஷியா சந்திக்கின்றது.