கோலாலம்பூர், ஆக. 6-

இந்திய சமுதாயம் கல்வியில் உருமாற்றம் காண வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தொடங்கப்பட்டது. இந்நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கல்வி யாத்திரை தேசிய நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுமென அதன் இயக்குநர் டான்ஸ்ரீ தம்பிராஜா அறிவித்தார்.

1995ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய நிலையில் கல்வி யாத்திரை தொடங்கியது. இந்த விழாவில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். பின்னாளில் இது தொடர்ந்து நடந்தது. இப்போது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி யாத்திரையை நடத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முடிவு செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரிக்பில்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளியில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மாநில ரீதியாக கல்வி யாத்திரை மிகச் சிறப்பாக நடந்தது. இதில் 2500 மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். முன்னதாக அங்கிருந்து பிரிக்பிட்ல்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் நோக்கி பால்குடம் ஏந்திச் சென்று தங்களில் நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டான்ஸ்ரீ தம்பிராஜா மேற்கொண்டவாறு கூறினார்.

முன்னதாக ஆகஸ்ட் மாதம் மிக முக்கியமானது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக அடுத்த மாதம் அதாவது செப்டம்பரில் யூபிஎஸ்ஆர், அக்டோபரில் பிடி3, நவம்பரில் எஸ்பிஎம் தேர்வுகள் நடக்கவிருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு இறுதிக் கட்ட தயார் நிலைக்கு மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள இந்த ஆகஸ்ட் மாதம் துணை புரியும்.

அதனால் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு, கல்விதான் அனைத்தும் என்ற சிந்தனை மட்டுமே மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். மாணவர்களின் இந்த வளர்ச்சிக்கு பெற்றோர்களும் தியாகம் செய்ய வேண்டியது அவசியமென்பதையும் டான்ஸ்ரீ தம்பிராஜா சுட்டிக் காட்டினார். ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தைச் சாராத மாணவர்களாக இருந்தாலும், இந்த வழிமுறையை கடைபிடிக்கலாம். இந்த ஆகஸ்ட் மாதம் முழுக்க கல்வியை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தால், வெற்றி நிச்சயமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரிக்பில்ட்ஸ் உட்பட கிள்ளான், பேராக், ஜோகூரிலும் இந்த கல்வி யாத்திரை நடந்தது. தமிழ்நாடு திருத்தணி முருகன் ஆலய பாலாஜி குருக்கள் தலைமையில் கல்வி யாத்திரை நடந்தது. கடந்த 1 மாதமாக திருத்தணி ஆலயத்தின் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மாணவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டதாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் பிரகாஷ் ராவ் கூறினார். கல்வி யாத்திரையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா, உட்பட ஒருங்கிணைப்பாளர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.