திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நஜீப்பிற்கே ஆதரவு! மக்கள் சக்தி தனேந்திரன் உறுதி
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

நஜீப்பிற்கே ஆதரவு! மக்கள் சக்தி தனேந்திரன் உறுதி

கோலாலம்பூர், ஜூலை 12-

மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி பிளவுபடாத ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதியாக தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு தொடங்கி இந்நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் கட்டம் கட்டமாக உருமாற்றம் கண்டன. புதிதாக பல்கலைக்கழக அளவிற்கு தமிழ்ப்பள்ளிகளை கட்டி இந்நாட்டு இந்தியர்களின் அடையாளத்தை டத்தோஸ்ரீ நஜீப் மேம்படுத்தினார்.

அதோடு, மோசமான நிலையிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் உருமாற்றம் செய்வதற்கு தமது ஆட்சிக் காலத்தில் 80 கோடி வெள்ளியை மானியமாக அவர் வழங்கியுள்ளார். குறிப்பாக, உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை அறிந்து மெட்ரிகுலேஷன் கல்லூரியில் 1,500 இட ஒதுக்கீடையும் அவர் வழங்கினார்.

தேர்தலுக்கு முன்னதாக அந்த எண்ணிக்கை 2,200ஆக உயர்த்தப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். அதோடு, கல்வியில் பின் தங்கிய மாணவர்களும் எதிர்காலத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக போலி டெக்னிக் கல்லூரியில் இந்தியர்களுக்காக தனி இட ஒதுக்கீடையும் அவர் அறிவித்தார்.

முன்னதாக வியாழக்கிழமை காலை டத்தோஸ்ரீ நஜீப்பை அவரது இல்லத்தில் டத்தோஸ்ரீ தனேந்திரன் உட்பட மக்கள் சக்தியின் முதன்மை தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது இந்திய சமுதாயத்திற்காக இதுவரை சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு தாம் நன்றி தெரிவித்துக் கொண்டதாக தனேந்திரன் கூறினார்.

2009ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றவுடன் இந்திய சமுதாயத்திடம் கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க நஜீப் பிரதமர் துறையின் கீழ் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்க பிரிவை தொடங்கினார். குடியுரிமை பிரச்னை தீர்க்க மைடப்தார் தொடங்கப்பட்டது. நாடு தழுவிய நிலையில் வேலை வாய்ப்புக்களுக்கான கருத்தரங்குகளும் நடந்தன.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக சீட் செயல்பட்டது. பின்னர் இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என செடிக்கையும் அவர் அறிமுகப்படுத்தி மானியங்களை வாரி வழங்கினார். இப்படி இந்திய சமுதாயத்திற்காக டத்தோஸ்ரீ நஜீப் செய்த செயல்திட்டங்களை தொடர்ந்து பட்டியலிடலாம். அவரின் செயல்பாட்டிற்காக மக்கள் சக்தி கட்சி தொடர்ந்து ஆதரவு வழங்கும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக 14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு நம்பிக்கை கூட்டணி அரசு பல வாக்குறுதிகளை வழங்கியது. இந்த வாக்குறுதிகள் மக்களை வெகுவாக கவர்ந்ததால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்று வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர விரும்பவில்லை என்ற நோக்கத்தில்தான் தாம் அம்மாதிரியான வாக்குறுதிகளை வழங்கவில்லை என டத்தோஸ்ரீ நஜீப் தம்மிடம் கூறியதாக தனேந்திரன் தெரிவித்தார்.

கடந்த கால அமைச்சரவையில் ஒரே ஒரு முழு இந்திய அமைச்சர் இருந்தார். சமுதாயத்திற்கு எந்த பிரச்னைகள் எழுதும்போதும் குரல் எழுப்புவதற்கு ஆள் இருந்தார்கள். ஆனால் இன்று அமைச்சரவையில் இந்தியர்களின் பிரதிநிதிகளாக 3 பேர் இருக்கிறார்கள்.

இதுநாள் வரை ஸாகிர் நைக், இந்தியாவிற்கு விசா கட்டணம் குறித்து கருத்துரைக்க எவரும் முன் வராதது சமுதாயத்திற்கு ஏமாற்றம்தான். பதவியில் அமர்வதற்கு முன் பல்வேறு விவகாரங்கள் குறித்து சர்ச்சை எழுப்பியவர்கள் இன்று அதே விவகாரங்களுக்காக அமைச்சராக இருக்கும்போது அமைதி காக்கிறார்கள். இதுதான் அரசியல் என டத்தோஸ்ரீ தனேந்திரன் சுட்டிக் காட்டினார்.

மக்கள் சக்தி கட்சியை பொறுத்தவரை இந்திய சமுதாயத்திற்கு எந்த பிரச்னை இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என டத்தோஸ்ரீ தனேந்திரன் உறுதியாகக் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன