சபாநாயகரின் பெயர் அறிவிக்கபடாதது நாடாளுமன்றக் கூட்டத்தை பாதிக்குமா? -குலசேகரன் விளக்கம்

0
8

ஈப்போ, ஜூலை 14
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இருப்பினும், சபாநாயகரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருப்பது அக்கூட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்று மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவிதுள்ளார்.

இந்த விவகாரத்தை சில தரப்பினர் வேண்டுமென்றே தூண்டி விடுகின்றனர். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் விவகாரத்திலிருந்து கவனத்தை திசைத் திருப்புவதற்காக இந்த விவகாரத்தை தூண்டிவிடுவது போல் உள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் இருப்பதால் நாடாளுமன்றக் கூட்டம் பாதிக்கப்படாது. எங்களைக் கடமையை சரியாக செய்ய விட்டு விடுங்கள். அரசை அமைத்து 2 மாதங்களே ஆனாலும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஈப்போ பெரிய சந்தையில் அமைச்சின் மக்கள் சேவை மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.

சபாநாயகரின் பெயரை இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது கூட்ட மன்ற விதிமுறையின் 3 மற்றும் 4ஆவது விதிப்படி தவறாகும். கூட்டம் நடைபெறுவதற்குக் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்பாக அவரது பெயரை மக்களவைச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியமாகும் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் குற்றச்சாட்டிற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்தார்.