இனி சாதி அரசியலுக்கு இடம் இல்லை -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

0
7

கோலாலம்பூர், ஜூலை 14
ம.இ.கா. அரசியல் பயணத்தில் இனி சாதி பாகுபாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஒருவரின் பிறப்பை முன்னிறுத்தி அரசியல் நடத்துவது கட்சிக்கு எந்த வழியிலும் நன்மையை கொண்டு வராது. அதை விட சாதி அரசியலை முன்னெடுப்பது கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

ம.இ.கா. இனி மீண்டெழ வாய்ப்பில்லை என சிலர் இன்னமும் கூறி வருகிறார்கள். ஆனால், இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ம.இ.கா. தமது கடமையை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். 62 ஆண்டுகளாக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சி இன்று எதிர்க்கட்சியாகி விட்டது. இதனால், பல உறுப்பினர்கள் ம.இ.கா.விலிருந்து தொடர்ந்து விலகி வருகிறார்கள். அந்த நடவடிக்கையை தாம் வரவேற்பதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இக்கட்டான சூழ்நிலையில் கட்சியை விட்டு வெளியேறுபவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு காலக் கட்டத்தில் ம.இ.கா.வின் உண்மையான விசுவாசிகள் யார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதன் பிறகே ஒரே கொள்கையோடு ம.இ.கா. பயணிக்க தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ம.இ.கா. பயணம் முடிந்து விடவில்லை. இது புதிய பயணத்திற்கான தொடக்கம். எப்படிப்பட்ட சவால்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதே நேரத்தில் இந்நாட்டில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருவோம் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ம.இ.கா.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பல்வேறான அமைப்புக்களை தொடங்கி மக்களுக்கான மானியங்களை பெற்றுக் கொண்டார்கள். அது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றால் அவர்களைத்தான் அணுக வேண்டுமே தவிர ம.இ.கா.வின் பெயரை பயன்படுத்தக்கூடாது. இனி வரும் காலங்களில் ம.இ.கா.விற்கு எதிராக அவதூறுகளை பரப்பி வரும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

தமது தலைமைத்துவத்தின் கீழ் அணி அமைத்து ம.இ.கா.வின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் களம் இறங்குவது குறித்து இன்னமும் யோசிக்கவில்லை என அவர் தெரிவித்தார். முன்னதாக கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ சரவணனின் பெயரையும் அவர் முன்மொழிந்திருந்தார். கட்சியின் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ் சந்திரன், மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி, டத்தோ டி.மோகன் ஆகியோருக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.