கெஅடிலான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அன்வார் !

0
8

கோலாலம்பூர், ஜூலை.15-

கெஅடிலான் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பதாக அக்கட்சியின் பொதுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில் நடப்பு தலைவரும் தமது மனைவியுமான டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா, துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி, கட்சியின் உயர் மட்ட தலைவர்களுடன் தாம் கலந்து ஆலோசித்திருப்பதாக அன்வார் கூறினார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் கெஅடிலான் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக  இருந்ததாகவும் அப்போது சங்கங்களின் பதிவகம் ஏற்படுத்திய சில தடைகளால் தமது எண்ணம் ஈடேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனினும் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசாவின் தலைமைத்துவத்தின் கீழ் கெஅடிலான் கட்சி இதர எதிர்கட்சிகளுடன் இணைந்து , 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் தேசிய  முன்னணியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிராகரித்தது.

2013 ஆம் ஆண்டில் நடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் 51 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற வேளையில், கடந்த மே 9 ஆம் தேதி நடந்த 14 -ஆவது பொதுத் தேர்தலில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று பாக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைக்க உதவிப் புரிந்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இந்நிலையில் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தாம் முடிவு செய்துள்ளதாக அன்வார் தெரிவித்தார். அனைவரின் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள  கெஅடிலான் கட்சியின் பொதுப் பேரவைக்குப் பின்னர் தாம் கட்சியை வழி நடத்த விருப்பதாக அன்வார் தெரிவித்துள்ளார்.