கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இம்முறையும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு இது தெரியும் என்றாலும் புதியவர்களுக்கு இதை அடையாளம் காண முடியாது. சூப்பர் சிங்கர் 6 பாடல் திறன் போட்டியின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஸ்ரீ காந்த், ரக்ஷித்தா ஆகியோரும் சிறந்த பாடல்களை பாடி மக்களை கவர்ந்த வேளையில் கிராமத்து பாடல்களை பாடி மண் மனம் வீசிய செந்தில் கணேஷ் இவ்வாண்டுக்கான வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

செந்தில் கணேஷ் சிறந்த பாடகர்தான் என்பதற்கு மாற்று கருத்து இருக்காது. ஆனால், அவர் நாட்டுப் புறப் பாடல்கள் கிராமிய பாடல்களை பாடுவதில் வல்லவர். ஸ்ரீ காந்த், ரக்ஷித்தாவை பொறுத்தவரை அனைத்து சுற்றுகளிலும் எல்லா விதமான பாடல்களையும் பாடக்கூடிய ஆற்றமிக்கவர்கள். இவர்களில் எவராவது ஒருவர் தான் சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டிச் செல்வார் என இசை ரசிகர்கள் மட்டுமே விரும்பினார்கள். சூப்பர் சிங்கரை தொடர்ந்து கவனித்து வரும் ரசிகர்கள் செந்தில் கணேஷ்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது முன்னமே அறிந்த விஷயம்தான் என கழித்தார்கள்.

சூப்பர் சிங்கர் 5யை பொறுத்தவரை ஆனந்த் அர்வின் அக்ஷன் வெற்றியாளர் பட்டத்தை வென்றார். ஆனால் இவர் சூப்பர் சிங்கரில் பாடுவதற்கு முன்னதாகவே பின்னணி பாடகராக அறியப்பட்டவர். பட்டத்தை வென்ற பிறகு இந்த சர்ச்சை வெடித்தது. அதை தற்காத்து பேசிய விஜய் தொலைக்காட்சி பின்னர் சூப்பர் சிங்கரை ஒராண்டிக்கு தள்ளி வைத்தது. பின்னர் சூப்பர் சிங்கர் ஜுனியரை நடத்தினார்கள். அதிலும் மக்கள் எதிர்பார்த்த போட்டியாளர் பட்டத்தை வெல்லவில்லை. அனுதாப வாக்குகளை பெற்று பிரித்திக்கா வென்றார்.

சூப்பர் சிங்கர் 6இன் இறுதி போட்டியில் செந்தில் கணேஷ் சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்தினார். ஆனால், ஒட்டு மொத்த சீசனில் சிறந்த அடைவுநிலையை பதிவு செய்தவர்கள் அடையாளம் காணப்படாமல் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இப்போட்டியில் வெல்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவார் என கூறப்பட்டது. இதனிடையே, இந்த போட்டி முடிந்து வெற்றியாளராக செந்தில் கணேஷ்  அறிவிக்கப்பட்ட பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பாட ஸ்ரீ காந்த்துக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாடலின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்ரீகாந்த் 3 வெற்றியாளர்களில் ஒருவராகக்கூட இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி. குறிப்பாக, இறுதி சுற்றுக்கு முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாராட்டை பெற்ற ஸ்ரீ காந்த் இறுதி போட்டியில் தோல்வியை தழுவினார். வாக்கெடுப்பின் மூலம் திறமையை அடையாளம் காண்பது தவறு என்பதை பல முறை சுட்டிக் காட்டியும் விஜய் தொலைக்காட்சி இதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

புகழ் பெற்ற பாடல்களுடன் வாய்ப்புக்காக காத்திருக்கும் பாடகர்களை பயன்படுத்தி அடுத்த நிகழ்ச்சியும் நடத்தி இறுதிச் சுற்றில் அதிர்ச்சியை தருவதற்கு மீண்டும் விஜய் டிவி தயாராகும். இது வழக்கமான நடைமுறை என்பது சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.